Published : 22 May 2024 09:05 AM
Last Updated : 22 May 2024 09:05 AM
கோபே: நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்றுள்ள முதல் தங்கம் இது. இந்த தொடரில் இதுவரை இந்தியா மொத்தம் நான்கு தங்கம் வென்றுள்ளது.
11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 171 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
T63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் கடந்த 1.83 மீட்டர் உயரமே சிறந்த சாதனையாக இருந்தது. இதே பிரிவில் 1.78 மீட்டர் உயரம் தாண்டி நான்காம் இடத்தை பிடித்தார் வருண் சிங். மற்றொரு இந்திய வீரரான பதியர் ஏழாம் இடத்தை பிடித்தார்.
கடந்த முறை வெண்கலம் வெல்லும் வாய்ப்பை மாரியப்பன் மிஸ் செய்தார். இந்த சூழலில் நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரை 1.74 மீட்டருடன் தொடங்கினார். 1.78 மீட்டர், 1.82 மீட்டர், 1.85 மீட்டர் என படிப்படியாக அதை கூட்டி அசத்தினார். இறுதியாக 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: “ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வரும் 2024 பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை அன்று உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய நாட்டிற்கும், தமிழகத்துக்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.
இந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் தனது வாழத்தில் குறிப்பிட்டுள்ளார்.
A monumental leap to glory!
Congratulations to Mariyappan Thangavelu for clinching gold in the men's high jump T63 at the World Para Athletics Championships in Kobe, Japan. Here's to even greater heights in the future!#MariyappanThangavelu #WorldParaAthletics pic.twitter.com/MzhD5jj6hX— M.K.Stalin (@mkstalin) May 21, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT