Published : 20 May 2024 07:01 AM
Last Updated : 20 May 2024 07:01 AM

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் தோல்வி அடைந்தோம்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி

பெங்களூரு: பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் தோல்வி கண்டோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே, பெங்களூருராயல் சாலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதின. இந்தப் போட்டி 2 அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள்ளாகவோவென்றால் ஆர்சிபி அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலைஇருந்தது.

இதையடுத்து முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. விராட் கோலி 47 (29பந்துகள்), கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 54 (39 பந்துகள்), ரஜத் பட்டிதார் 41, கேமரூன் கிரீன் 38, தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்கள் எடுத்தனர்.

சிஎஸ்கே தரப்பில் ஷர்துல் தாக்குர் 2, மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 0, ரச்சின் ரவீந்திரா 61, டேரில் மிட்செல் 4, அஜிங்க்ய ரஹானே 33, ஷிவம் துபே 7, மிட்செல் சான்ட்னர் 3, ஷர்துல் தாக்குர் ஒரு ரன் எடுத்தனர். கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி அதிரடியாக விளையாடியபோதும் இலக்கை எட்ட முடியவில்லை. தோனி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 42 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரின்போது 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை,ஆர்சிபி அணியின் யஷ் தயாள் வீசினார்.

ஓவரின் முதல் பந்தை தோனி 110 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸராக விளாசினார். ஆனால் 2-வது பந்திலேயே தோனி ஆட்டமிழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த யஷ் தயாள் தனது அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

போட்டியின் முடிவில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்றிருந்தபோதும் நிகர ரன் ரேட்டில் முன்னேறிய ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: பெங்களூரு ஆடுகளம் மிகவும் சிறப்பாகத்தான் இருந்தது. இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேலான இலக்கைநிச்சயம் எட்ட முடியும் என்றுநம்பினோம். ஆனால் சேசிங்கின்போது நாங்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துகொண்டே இருந்தோம். இதனால்தான் நாங்கள் தோல்வி கண்டோம்.

14 லீக் ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அதே நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாதது வருத்தம் அளிக்கிறது.

அணி வீரர்கள் சிலர் காயங்களால் விலகியது, முக்கிய வீரர்களை தவறவிட்டது போன்ற பிரச்சினைகள் இந்த சீசனில் எங்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

முதலில் முஸ்டாபிஸுர் காயத்தால் அவதிப்பட்டார். பின்னர் அவர் அணிக்குத் திரும்பினார். அதேபோலவே பதிரனாவும் காயத்தால் அவதிப்பட்டு பின்னர் அணிக்குத் திரும்பினார். கடைசி லீக் ஆட்டங்களின்போது இவர்கள் 2 பேருமே அணியில் இல்லை.

7 ஆட்டங்களில் வெற்றி பெற்றபோதும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாதது ஏமாற்றம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x