Published : 19 May 2024 08:32 PM
Last Updated : 19 May 2024 08:32 PM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சரித்திர சாதனை படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை (மே 18) நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும் அது நெட் ரன் ரேட் அடிப்படையில் பெற வேண்டுமென்ற என்ற நெருக்கடி நிலையில் இருந்தது. மறுபக்கம் மழையோடும் ஆர்சிபி போராட வேண்டியிருந்தது.
இந்தப் போட்டியில் மழையினால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலோ அல்லது சிஎஸ்கே கூடுதலாக 10 ரன்கள் எடுத்திருந்தாலோ கதையே மாறி இருக்கும். அதற்கு முன்னதாக ஆர்சிபி பெற்ற தொடர் வெற்றிகள் அந்த அணிக்கு உத்வேகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன் காரணமாகவே சிஎஸ்கே-வை வீழ்த்திய பிறகு ஆர்சிபி அணியினர் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டனர்.
நடிகர் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் ஒரு காட்சி வரும். எதிரியின் ஏரியாவில் போஸ்டர் ஒட்ட சென்று அங்கு தனுஷ் சிக்கிக் கொள்வார். அவரை எதிரிகள் சேர்த்து பயங்கரமாக தாக்குவார்கள். அந்தக் காட்சியின் கடைசி கட்டத்தில் அவரது உயிரை எடுக்கலாம் என முடிவு செய்தவரை தனுஷ் தாக்குவார். ஒரே அடியில் அந்த எதிரியின் உயிர் போக சுற்றி நிற்கும் அனைவரும் அப்படியே அவரை பார்த்து பயத்தில் உறைந்து போய் நிற்பார்கள். அப்படியோரு கம்பேக்கை இந்த சீசனில் கொடுத்துள்ளது ஆர்சிபி.
லீக் சுற்றின் முதல் 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் கடைசி 6 போட்டிகளில் 6-லும் வெற்றி பெற்றது. அதுவும் சிஎஸ்கே அணியுடனான போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பே இல்லை என பல கணக்குகள் சொல்லப்பட்டன. இலக்கை விரட்டினால் இத்தனை ஓவர்களில் வெற்றி பெற வேண்டும். இலக்கை டிஃபென்ட் செய்தால் இத்தன ரன்களில் வெற்றி பெற வேண்டும் என சொல்லப்பட்டது. அது அனைத்தையும் வெற்றிகரமாக ஆர்சிபி கடந்தது. வாகை சூடியது.
முதல் எட்டு போட்டிகளில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மட்டுமே அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்போது கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் ஆர்சிபி அணியை விமர்சித்தனர். ‘ஆர்சிபி-யின் கதை இந்த சீசனில் அவ்ளோ தான்’ என அனைவரும் எண்ணி இருந்த நேரம். அப்போது என்ன மாயம் நடந்தது என்பது யாரும் அறியாதது. ஆர்சிபி ஆர்பரித்து எழுச்சி கண்டது.
விராட் கோலிக்கு உறுதுணையாக டூப்ளசி, கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் போன்ற வீரர்கள் ரன் குவித்தனர். பந்து வீச்சில் சிராஜ் ஃபார்முக்கு திரும்பினார். அவருடன் யாஷ் தயாள், ஃபெர்குசன் போன்றவர்கள் வேகங்கள் சேர பவுலிங் யூனிட் வலுவானது. சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா மற்றும் ஸ்வப்னில் சிங் போன்றவர்களும் கைகொடுத்தனர். அனைத்தும் சரியானது. தொடர் வெற்றிகள் குவித்து இதோ பிளே ஆஃப் சுற்றுக்குள் என்ட்ரி கொடுத்துவிட்டது ஆர்சிபி.
அந்த அணி வரும் புதன்கிழமை அன்று (மே 22) அகமதாபாத்தில் எலிமினேட்டரில் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் சென்னை - சேப்பாக்கத்தில் 24-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபையர் 2-வில் விளையாடும். அதில் வெற்றி பெற்றால் சென்னையில் 26-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் நெடுநாள் கனவாக உள்ள ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற கோப்பை வெல்லும் கனவும் மெய்யாகும்.
ஆர்சிபி இதற்கு முன்னர் தொடர் வெற்றிகள் பெற்ற போது இறுதிப்போட்டி வரை முன்னேறி உள்ளது. 2009 சீசன் (5 தொடர் வெற்றிகள்), 2011 (7 தொடர் வெற்றிகள்), 2016 (5 தொடர் வெற்றிகள்) பெற்று இறுதியில் ஆடி இருந்தது. இது 2024 சீசனில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த முறை அனைத்தும் சரியாக அமைந்தால் கோப்பை வென்று காட்டும் வாய்ப்பு கைகூடும். இப்போது கோப்பைக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையில் மூன்று வெற்றிகள் மட்டுமே இடைவெளியாக உள்ளது.
சரண் அடைந்த சிஎஸ்கே: ஆர்சிபி அணியுடனான கடைசி லீக் போட்டியில் ஃபீல்டிங்கின் போது 16-வது ஓவரில் கேமரூன் கிரீன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது. அப்போது அவர் 11 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். அதன் பிறகு 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். அது ஆர்சிபி அணிக்கு பெரிதும் கைகொடுத்தது. அதேபோல ஷிவம் துபே 15 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரன் அவுட் ஆனதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT