Last Updated : 28 Apr, 2018 07:31 PM

 

Published : 28 Apr 2018 07:31 PM
Last Updated : 28 Apr 2018 07:31 PM

ஐபிஎல் 2018: இவர்களை அணியிலிருந்து நீக்கலாமா?

ஐபிஎல் கிரிக்கெட் அதன் உச்சக்கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் சில அணிகள் 7 போட்டிகளில் ஆடியுள்ளது. சில அணிகள் 6 போட்டிகளில் ஆடியுள்ளன.

இந்நிலையில் ஒரு சில அணிகளில் சில வீரர்கள் சுமையாக இருந்து வருவதோடு பிற வீரர்களின் வாய்ப்பையும் இந்த வீரர்கள் தடுத்து வருகின்றனர்.

அந்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா, ஏரோன் பிஞ்ச், ஜெயதேவ் உனாட்கட், கெய்ரன் பொலார்ட், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மாவும் இந்தப் பட்டியலில்தான் உள்ளார், ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன். ஆனால் இவருக்கும் முன்னுதாரணமாகியுள்ளார் கம்பீர், தனது கேப்டன்சியையும் துறந்து போட்டியிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டதோடு இந்த ஐபிஎல் சீசனில் சம்பளம் வேண்டாம் எனுன் அளவுக்கு உணர்ச்சிகர முடிவை எடுத்துள்ளார்.

நீக்கப்பட வேண்டிய வீரர்களைப் பார்ப்போம்:

ஜடேஜா:

இவருக்கு கேப்டன் தோனியின் அதீத ஆதரவு இருக்கிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் இவரைத் தக்கவைத்தது. இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ரன்கள் எடுத்த பிறகு தான் இனி பேட்டிங்கில்தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்று கூறி தன் பவுலிங் வாய்ப்பையும் ஆல்ரவுண்டர் என்ற தகுதியையும் தானே கேள்விக்குட்படுத்திக் கொண்டார்.

தோனியும் இவரைப்பற்றி பேட்டியிலெல்லாம் விதந்தோதினாலும் இவர் ஒரு விதத்திலும் தேறுபவராகத் தெரியவில்லை. சில பத்திரிகைகள் ‘ஜடேஜாவில் புதிய பினிஷரை இனம் காணும் தோனி’ என்று கிண்டலாகக் கூட தலைப்பு வைத்து செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிட்டன.

இந்த சீசனில் ஜடேஜா 6 போட்டிகளில் 47 ரன்களைத்தான் எடுத்துள்ளார். சராசரி 15.66. ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார், சரி, சிக்கன விகிதமாவது சாதகமாக இருக்கிறதா என்றால் இல்லை. ஓவருக்கு 8.40 ரன்கள் கொடுத்து வருகிறார். இவருக்குப் பதிலாக துருவ் ஷோரி என்ற வலது கை பேட்ஸ்மென், வலது கை ஆஃப் பிரேக் பவுலரைக் கொண்டு வரவேண்டும். அல்லது மோனு குமார் என்ற பவுலிங் ஆல் ரவுண்டர் இருக்கிறார். முடிவெடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

ரூ.11.5 கோடி ஜெயதேவ் உனாட்கட்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுத்த இரண்டு வீரர்களில் ஜெயதேவ் உனாட்கட் ஒருவர். ஏலத்துக்கு முன்பாக உண்மையிலேயே அருமையாக வீசி வந்த உனாட்கட் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் சாத்துமுறை வாங்கி வருகிறார்.

6 போட்டிகளில் ஆடிய உனாட்கட் 3 விக்கெட்டுகள்தான் எடுத்துள்ளார், சிக்கன விகிதம் ஓவருக்கு 10.05 ரன்கள் கொடுத்துள்ளார். முதலில் ஓரிரு போட்டிகளில் 4 ஓவர்கள் கோட்டாவையே அவரால் முடிக்க முடியவில்லை.

இவர் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர். இவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் அனுரீத் சிங் எடுக்கலாம் அல்லது லெக் பிரேக் கூக்ளி பவுலரான பிரசாந்த் சோப்ராவை எடுக்கலாம்.

ஏரோன் பிஞ்ச்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச்சை ரூ.6.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஐபிஎல் தொடரில் இவரது ஸ்கோர் 0 0 14 நாட் அவுட், 2 மற்றும் 8. இவரும் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் இவருக்குப் பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம்பெற வேண்டும்.

யுவராஜ் சிங்:

நிச்சயமாக யுவராஜ் சிங் நல்ல பார்மில் இருந்து ஆடினால், இவரது ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் பார்ம் அவுட் ஆகிவிட்டால் இவர் கடுமையாகச் சொதப்பி விடுவார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 4 போட்டிகளில் வெறும் 50 ரன்களைத்தான் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 89, சராசரி 12.50. கேப்டன் அஸ்வின் கூட இவரை விட 3 ரன்கள் கூட எடுத்துள்ளார்.

இதே நிலைமைதான் கிங்ஸ் லெவனின் தொடக்க வீரர் டியார்க்கி ஷார்ட் என்பவருக்கும் உள்ளது.

கெய்ரன் பொலார்ட்:

2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிவருபவர் பொலார்ட், அருமையான சில இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். சில முக்கியமான கட்டங்களில் முக்கியமான ஓவர்களை வீசியுள்ளார், அனைத்துக்கும் மேலாக ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேட்ச்களை எடுத்தது பொலார்ட்தான், இவரது கேட்சை முறியடித்தவர் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் போல்ட்தான், விராட் கோலிக்கு போல்ட் அந்த திகைக்கவைக்கும் கேட்சை எடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 63 ரன்கள்தான் எடுத்துள்ளார். டுமினி இவருக்குப் பதிலாக இறக்கப்பட வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

ரோஹித் சர்மா:

இது மிகக் கடினமான வேலைதான், ரோஹித் சர்மாவை நீக்குவது என்பது சாதாரணமல்ல, மிகப்பெரிய லாபி இவருக்கு உண்டு. ஆனால் இந்த ஐபிஎல் போட்டியில் இவரது டவுன் ஆர்டரில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்து வருகின்றன.

இவர் தொடக்கத்தில் களமிறங்குவதுதான் சரி என்று முன்னாள் மும்பை பேட்ஸ்மென் லால்சந்த் ராஜ்புத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரது டவுன் ஆர்டர் குழப்பம் தொடர்கிறது, கேப்டன்சியும் சொல்லிக் கொள்ளும் படியில்லை, களவியூகம் பந்து வீச்சு மாற்றம் என்று சொதப்பி வருகிறார். ஒருவேளை டுமினியிடம் கேப்டன்சியைக் கொடுத்துப் பார்த்தால் டெல்லி அணிக்கு ஏற்பட்ட மாற்றம் போல் ஏற்படலாம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிராக பெற்ற வெற்றியில் அடித்த 94 ரன்கள் தவிர 20 ரன்களை மற்ற இன்னிங்ஸ்களில் தாண்டவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x