Published : 18 May 2024 07:03 PM
Last Updated : 18 May 2024 07:03 PM
சென்னை: இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் திராவிட் பதவிக் காலம் முடிவு பெறுகிறது. இந்தச் சூழலில் அந்த பொறுப்புக்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது பிசிசிஐ.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களையே பயிற்சியாளராக நியமித்து வரும் பிசிசிஐ அந்த நடைமுறையே தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தற்போது கேகேஆர் அணியின் வழிகாட்டியாக உள்ளார். எனவே, ஐபிஎல் தொடர் முடிந்ததும் கம்பீருடன் பயிற்சியாளர் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் பெயர் அடிபட்டது. ஆனால், கடந்த வருடம் தனிப்பட்ட காரணங்களுக்கு விவிஎஸ் லட்சுமண் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில் தான் கம்பீர் பெயர் தற்போது அடிபடத் தொடங்கியுள்ளது.
கம்பீருக்கு சர்வதேச தொடர் அளவில் பயிற்சியாளர் அனுபவம் இல்லை என்றாலும், இரண்டு ஐபிஎல் அணிகளின் வழிகாட்டியாக இருந்துள்ளார். லக்னோ அணியின் வழிகாட்டியாக அந்த அணியை 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வைத்தார். தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கேகேஆர் அணிக்கு மீண்டும் திரும்பிய கம்பீர், தனது தலைமையில் அணியை பிளே ஆப் சுற்று பட்டியலில் முதலிடத்தை பெற வைத்துள்ளார்.
இதுதவிர தான் விளையாடிய காலத்தில் வெற்றிகரமான வீரராக இருந்தவர் கம்பீர். இந்தியா 2007ல் டி20 உலகக் கோப்பை வென்றபோதும், 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியவர் கம்பீர். இதுதவிர ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை ஏழு சீசனுகளுக்கு வழிநடத்திய கம்பீர் இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்ததோடு, ஐந்து முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியை தகுதிபெற வைத்தார். இதனால் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரியான சாய்ஸ் என அவரை பிசிசிஐ அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பெயரும் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT