Published : 04 Apr 2018 01:07 PM
Last Updated : 04 Apr 2018 01:07 PM
சென்னை உதயம் தியேட்டரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டி, வருகிற 7 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. சென்னையில் முதல் போட்டி வருகிற 10 ஆம் தேதி தொடங்குகிறது.
டிஜிட்டல் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், ஏற்கெனவே ரிலீஸ் செய்த படங்களையே மறுபடியும் திரையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை உதயம் தியேட்டரில் ஒளிபரப்ப அனுமதிக்கும்படி கேட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தியேட்டர் மேலாளர் ஹரிஹரனிடம் பேசினேன்.
“கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படங்கள் எதுவும் ரிலீஸாகதால், தியேட்டருக்கு கூட்டம் வருவதே இல்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பிரச்சினை எப்போது முடியும், படங்கள் எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை.
எனவேதான், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப முடிவு செய்தோம். அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் எங்களிடம் உள்ளன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் அனுமதி அளித்த பிறகுதான் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும். சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்களில் நடைபெறும் போட்டிகளும் ஒளிபரப்பப்படும்” என்கிறார் ஹரிஹரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT