Published : 17 May 2024 06:04 PM
Last Updated : 17 May 2024 06:04 PM
மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணித் தேர்வு பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விராட் கோலியை ஓரங்கட்ட நடைபெற்ற முயற்சி ரோஹித் சர்மாவினால் தடுத்து நிறுத்தப்பட்டது. காரணம், கோலியை உட்கார வைத்தால் ரோஹித் சர்மா ரசிகர்களின் சாபத்தைப் பெற வேண்டும். ஏனெனில் ‘கோலி இல்லை என்றால் ரோஹித் மட்டும் எதற்கு?’ என்ற கேள்வி வரும் என்று ரோஹித்துக்கு தெரியும்.
இந்நிலையில், ஐபிஎல் ஆட்டங்களை வைத்து மட்டும் அணியைத் தேர்வு செய்ய முடியாது என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் ஜெய் ஷா கூறும்போது, “தற்போது தேர்வாகியுள்ள அணியில் ஃபார்ம் மற்றும் அனுபவத்துக்கு இடையே சமநிலை உள்ளது. ஐபிஎல் ஆட்டத்திறன் ஸ்கோர்கள், விக்கெட்டுகளை மட்டும் வைத்து அணித் தேர்வாளர்களால் தேர்வு செய்ய முடியாது. வெளிநாட்டில் ஆடிய அனுபவமும் தேவை.” என்றார்.
மேலும், தன் பெரும் சாதனையாகக் கூறும்போது, கோவிட் தாக்கத்தின் போது யுஏஇ-யில் ஐபிஎல் 2020 தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்ததையே குறிப்பிட்டார். “இங்கிலிஷ் பிரீமியர் லீக், ஒலிம்பிக், பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட தொடர்கள் கோவிட்டினால் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. அப்போது பிசிசிஐ உலகுக்கு தன் சாதனையை எடுத்துக்காட்டியது. எதன் மூலம் என்றால் ஐபிஎல் போட்டிகளை நடத்தியடன் மூலமே.” என்றார்.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் திட்டத்தின் மூலம் ஆல்ரவுண்டர்கள் உருவாக மாட்டார்கள் என்ற விமர்சனம் குறித்து ஜெய் ஷா கூறுகையில், “இது பரிசோதனை முயற்சிதான், நிரந்தரமானது அல்ல. அனைவரும் இதுதொடர்பாக கலந்தாலோசித்து வருகிறோம். இதன்மூலம் நிறைய இந்திய வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது என்பதோடு போட்டிகளை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. எங்கள் கலந்தாலோசனையில் அதிருப்தி கண்டால் இம்பாக்ட் பிளேயர் முறையை மாற்றிவிடுவோம்” என்றார்.
ஐபிஎல் பிட்ச்கள் பேட்டிங்குக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்பதைப் பற்றி ஜெய் ஷா கூறும்போது, “நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். லக்னோ, சன்ரைசர்ஸ் போட்டியின் போது லக்னோ 165 ரன்களை எடுத்தது. சன்ரைசர்ஸ் 9 ஓவர்களில் சேஸ் செய்தது, அதுவும் விக்கெட்டுகளை இழக்காமல். பிட்ச்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. பிசிசிஐ மத்திய பிட்ச் தயாரிப்பாளர் மேற்பார்வையில்தான் பிட்ச்கள் போடப்படுகின்றன” என்றார்.
பேட்டிங் சாதகப் பிட்ச்கள் பற்றிய கேள்விக்கு 9 ஓவர்களில் 166 ரன்களை விரட்டிய போட்டியை உதாரணம் காட்டி பிட்ச்கள் நன்றாக இருக்கின்றன என்று ஜெய் ஷா கூறியிருப்பதன் அடிப்படைதான் நமக்குக் குழப்பமாக உள்ளது. 9 ஓவர்களில் 166 ரன்களை சேஸ் செய்தது என்ன பவுலிங் பிட்சிலா அல்லது சம பல பிட்சிலா?
ஜெய் ஷா மேலும் கூறும்போது, “2023 உலகக் கோப்பை பிரமாதமாக நடந்தது. இந்திய அணியும் பிரமாதமாக ஆடியது. ஆனாலும் கோப்பையை நழுவவிட்டோம். இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன்.” என்றார் ஜெய் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT