Published : 17 May 2024 07:41 AM
Last Updated : 17 May 2024 07:41 AM

சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: முடிவுக்கு வந்த 19 வருட கால்பந்து வாழ்க்கை

புதுடெல்லி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வரும் ஜூன் 6-ம் தேதி குவைத் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறுகிறது. தகுதி சுற்று தொடரில் ‘ஏ’ பிரிவில் உள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் குவைத் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி நேற்று சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் வாயிலாக அறிவித்துள்ளார்.

39 வயதான சுனில் ஷேத்ரி கடந்த 2005-ம்ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். 19 ஆண்டுகளாக இந்தியகால்பந்து அணியில் வேரூன்றிய அவர், 150 போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறார் சுனில் ஷேத்ரி.

அதேவளையில் சர்வதேச கால்பந்து அரங்கில் செயல்பாட்டில் உள்ள வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளார் சுனில் ஷேத்ரி.

நேரு கோப்பை தொடரில் 2007, 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி பட்டம் வெல்ல சுனில் ஷேத்ரி உதவியாக இருந்தார். மேலும் 2011, 2015, 2021-ம் ஆண்டுகளில் தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி பட்டம் வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாலஞ்ச் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதிலும் சுனில் ஷேத்ரி முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் 27 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசிய கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றிருந்தது.

செகந்திராபாத்தில் பிறந்த சுனில் ஷேத்ரி 2002-ம் ஆண்டு முதன் முறையாக கொல்கத்தாவில் உள்ள மோகன் பகான் அணிக்காககிளப் மட்டத்தில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் சிட்டி விஸார்ட்ஸ் அணிக்காகவும், 2012-ல் போர்ச்சுகலில் உள்ள ஸ்போர்ட்டிங் சிபி அணிக்காவும் விளையாடி இருந்தார்.

7 முறை இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ள சுனில் ஷேத்ரி இந்தியாவில் உள்ள கிளப்களில் ஈஸ்ட் பெங்கால் (2008-2009), டெம்போ (2009-2010) ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதன் பின்னர் ஐஎஸ்எல் தொடரில் மும்பை சிட்டிஎஃப்சி (2015-2016) மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

கிளப் போட்டிகளில் சுனில் ஷேத்ரி பெங்களூரு எஃப்சி அணியில் வெற்றிகரமாக வலம் வந்தார். இந்த அணியில் அவர், 2014 மற்றும் 2016-ம் ஆண்டில் ஐ லீக் தொடரில் பட்டம் வென்று கொடுத்தார். தொடர்ந்து2019-ம் ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் வாகை சூடினார். முன்னதாக 2018-ல் சூப்பர் கோப்பைதொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். 2016-ம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பையின் இறுதிப் போட்டியில் பெங்களூரு எஃப்சி அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்திய கால்பந்தின் முகமாக இருந்து வரும் சுனில் ஷேத்ரி ஓய்வு முடிவு குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

குவைத் அணிக்கு எதிராக வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள போட்டிதான் சர்வதேச கால்பந்து அரங்கில் எனது கடைசி போட்டி. இந்தியஅணிக்காக நான் அறிமுகமான ஆட்டத்தை என்னால் என்றும் மறக்க முடியாது. இந்திய அணியுடனான பயணத்தில் அன்றைய தினம் சிறப்பானது. இந்திய அணிக்காக விளையாடிய 19 ஆண்டுகளையும் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். இதில் கடமை, அழுத்தம், மகிழ்ச்சி ஆகியவை கலவையாக இருந்துள்ளது. இந்த பயணத்தில் நான் ஒருபோதும் தனிப்பட்ட நலனுக்காக விளையாடியது இல்லை.

நான் எனது அம்மா, அப்பா மற்றும் மனைவிஆகியோரிடம் ஓய்வு முடிவு குறித்து கூறினேன்.எனது அப்பா சாதாரணமாக இருந்தார். நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார், ஆனால் என் அம்மாவும் என் மனைவியும் அழுதனர். அவர்களால் என்னிடம் சொல்ல முடியவில்லை. நான் சோர்வாக உணர்ந்தேன் அல்லது வேறு விஷயங்களை உணர்ந்தேன் என்பதால் ஓய்வு பெறவில்லை. இது எனது கடைசி ஆட்டமாக இருக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு வந்தபோது, ஓய்வு முடிவை எடுத்துள்ளேன்.

இவ்வாறு சுனில் ஷேத்ரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x