Published : 16 May 2024 05:31 PM
Last Updated : 16 May 2024 05:31 PM

அணியில் ஒரு கருப்பின வீரர் மட்டுமே! - பிற்போக்காக செயல்படுகிறதா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்?

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒரேயொரு கருப்பின வீரராக ககிசோ ரபாடா மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நிறவெறி கொடுமைகளிலிருந்து மீண்டுவந்த பிறகு இழப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நேர்மறை இட ஒதுக்கீட்டு கொள்கை (affirmative action) நடைமுறைப்படுத்தலுக்கு எதிராக இது உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

தென் ஆப்பிரிக்க அரசின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஃபிகிலி மபாலுலா, கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவைச் சாடியுள்ளார். தென் ஆப்பிரிக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளின்படி வெள்ளையர் அல்லாத 6 வீரர்கள் குறைந்தது இடம்பெற வேண்டும். அதில் 2 ஆப்பிரிக்கக் கருப்பரின வீரர்கள் இடம்பெற்றே ஆக வேண்டும்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட உத்தேச தென் ஆப்பிரிக்க டி20 உலகக் கோப்பை அணியில் 6 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ரபாடா, ரீஸா ஹென்றிக்ஸ், ஜோர்ன் ஃபோர்ட்டுவின், கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்ஸி, ஆட்னியல் பார்ட்மேன் ஆகிய 6 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை அணியில் ககிசோ ரபாடா மட்டுமே ஒரே கருப்பரின வீரராக இடம்பெற்றுள்ளார். லுங்கி இங்கிடி ரிசர்வ் வீரர்.

இதனையடுத்து, முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஃபிகிலி மபாலுலா தென் ஆப்பிரிக்க வாரியத்தைச் சாடும்போது, “மாற்றங்கள் நடந்த பிறகும் ஒரேயொரு ஆப்பிரிக்க வீரர்தான் இடம்பெற்றிருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விடுதலையினால் பெற்ற சாதகங்களை தலைகீழாக்குவது போல் உள்ளது. அனைத்து தென் ஆப்பிரிக்கர்களுக்குமான நியாயமான பிரதிநிதித்துவம் அணியில் இல்லை" என்றுள்ளார்.

முன்னாள் ஐசிசி மற்றும் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைவர் ரே மாலி, “நிறைய சாதித்தும், கிரிக்கெட் தேர்வில் இன்று பின்னோக்கிச் சென்றுவிட்டோம். முற்போக்கை விட்டு பிற்போக்குக்கு சென்றுவிட்டொம். ஏன் அதிக கருப்பு வீரர்கள் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இல்லை. இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆனால், விமர்சனங்களுக்கு எந்தவித நேர்மறை பதிலையும் அளிக்க முடியாத தென் ஆப்பிரிக்க வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்சியாளர் ராப் வால்டர், “முதலில் ஒரு வெற்றி அணியை உருவாக்குவதே இலக்கு” என்கிறார். இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் சமூக - அரசியல் எதார்த்தங்கள் இன்னமும் மாறவில்லையா... ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x