Published : 16 May 2024 06:00 AM
Last Updated : 16 May 2024 06:00 AM
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. டெல்லி அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் வெற்றியால் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இதனால் மீதம் உள்ள இரு இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 10 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றை இழந்துவிட்டன. இந்த வரிசையில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் இணைவதற்காக காத்திருக்கின்றன.
ஏனெனில் 14 லீக் ஆட்டங்களையும் விளையாடி முடித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் -0.377 ஆக இருக்கிறது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதப்படுகிறது. சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்த வேண்டும். மேலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். அதிலும் இரு ஆட்டங்களிலும் 201 ரன்கள் இலக்கை துரத்தும் வகையில் கூட்டாக ஹைதராபாத் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஏதேனும் அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே டெல்லி அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாய்ப்பு உருவாகும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. 13 ஆட்டங்களில் விளையாடி -0.787 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். ஆனால் அது அந்த அணியை அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ 200 ரன்களை குவித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட நிகர ரன் ரேட் -0.351 என்றே இருக்கும்.
ஆர்சிபி… ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் விளையாடி 0.387 நிகர ரன் ரேட்டுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது. சிஎஸ்கே ஏற்கெனவே 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகளை கொண்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்த வேண்டும். இது நிகழ்ந்தால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும். உதாரணமாக பெங்களூரு அணி 200 ரன்கள் குவித்தால் குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் 200 ரன்கள் இலக்கை துரத்தினால் 18.1 ஓவரில் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால், அப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது கடைசி இருலீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஹைதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில்குஜராத் அணியை வீழ்த்தினால் எளிதாக அடுத்த சுற்றில் நுழைந்துவிடும். இது நிகழ்ந்தால் பெங்களூரு அணியானது சிஎஸ்கேவுக்கு எதிராக பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று கனவு மெய்ப்படும். சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலோ அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலோ பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறும்.
சிஎஸ்கே: 13 ஆட்டங்களில் விளையாடி சிஎஸ்கே 0.528 நிகர ரன் ரேட்டுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. வரும் சனிக்கிழமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிடும். ஒருவேளை இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் நிகர ரன் ரேட் பாதிக்கப்படாமல் சிஎஸ்கே அணி பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக சிஎஸ்கே அணி 200 ரன்கள் இலக்கை துரத்தினால் தோல்வி வித்தியாசம் 18 ரன்களுக்குள் இருக்க வேண்டும். இது நிகழ்ந்தால் பெங்களூருவை விட நிகர ரன் ரேட்டில் சிஎஸ்கேஅதிகமாக இருக்கும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதிலும் பிரச்சினை இருக்காது. மாறாக பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிடும். இந்த நிலை ஏற்பட்டால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கலை சந்திக்க நேரிடும். இது நிகழ்ந்தால் ஹைதராபாத் அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து நிகர ரன் ரேட்டில் பெரிய அளவில் சரிவை சந்தித்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்... 12 ஆட்டங்களில் விளையாடி 0.406 நிகர ரன் ரேட்டுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரு லீக் ஆட்டங்கள் (குஜராத், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) எஞ்சியுள்ளது. இதில் ஒன்றில்வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக ஒரு ஆட்டம் கைவிடப்பட்டாலோ ஹைதராபாத் அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிடும். ஒருவேளை ஹைதராபாத் அணி இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தால் சிஎஸ்கே - பெங்களூரு போட்டியின் முடிவை சார்ந்திருக்க நேரிடும். சிஎஸ்கே, பெங்களூரு அணியை வீழ்த்திவிட்டால் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பெறுவதில் சிக்கல் இருக்காது.
மாறாக பெங்களூரு அணி சிஎஸ்கேவை வென்று ஹைதராபாத் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தால் நெருக்கடி ஏற்படும். இந்த நிலை ஏற்பட்டால் சிஎஸ்கேவின் நிகர ரன் ரேட் ஹைதராபாத் அணியைவிட குறைவாக இருந்தால் மட்டுமே ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். எப்படி இருப்பினும் ஹைதராபாத் அணியின் அடுத்த கட்ட நகர்வு குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment