Published : 15 May 2024 04:17 PM
Last Updated : 15 May 2024 04:17 PM
சென்னை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இந்திய அணியில் வரும் நாட்களில் இடம்பிடிக்கும் வீரர் யார் என்ற கேள்வியை கேட்பதுண்டு. அதுவும் காயம் காரணமாக முக்கிய தொடர்களை அவர் மிஸ் செய்யும் நேரங்களில் இந்த சலசலப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டு ஹர்திக் விலகினார். அதன் பிறகு அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. நேரடியாக நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார். அதுவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசன் அந்த அணிக்கு சிறப்பான வகையில் அமையவில்லை.
சர்வதேச போட்டிகளில் களம் கண்டாலும் சில போட்டிகளில் பந்து வீசுவதை ஹர்திக் தவிர்த்த தருணமும் உண்டு. அதற்கு அவர் எதிர்கொண்டு வரும் காயம் சார்ந்த பாதிப்புகளே காரணம். நடப்பு ஐபிஎல் சீசனில் ஃபிட்டாக உள்ளார். அவர் திறன் படைத்த வீரர்தான். ஃபார்ம் அவுட் காரணமாக தடுமாறி வருகிறார்.
ஆனாலும் இந்த சீசனின் தொடக்கம் முதலே அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கான தேடல் ஒருபக்கம் இருந்து வருகிறது. அவர்களில் நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட சில வீர்கர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிதிஷ் குமார் ரெட்டி: 20 வயதான நிதிஷ் குமார் ரெட்டி, உள்ளூர் கிரிக்கெட்டில் ஆந்திர அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. வலது கை பேட்ஸ்மேன் மற்றும் மீடியம் ஃபாஸ்ட் பவுலர். நடப்பு ஐபிஎல் சீசனில் 7 இன்னிங்ஸ் ஆடி 230 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை தனது அணிக்காக வெளிப்படுத்தியுள்ளார். ‘அண்டர் 16’ பிரிவில் பிசிசிஐ-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்.
அர்ஷத் கான்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் 26 வயதான அர்ஷத் கான். இடது கை பவுலர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். துவண்டு கிடந்த லக்னோ அணிக்கு ஆட்டத்தில் நம்பிக்கை அளித்தார்.
“அர்ஷத் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் பந்தை ஸ்விங் செய்வார். பீல்டிங்கிலும் துடிப்புடன் செயல்படுவார். அவரால் அதிரடியாக பேட் செய்யவும் முடியும். அவரது திறனை சீரான முறையில் இதே போல வெளிப்படுத்தினால் ஆல் ரவுண்ட் கிரிக்கெட்டராக அசத்துவார். இதை நான் இந்த சீசனில் அவருடன் பயணித்த அனுபவத்தில் சொல்கிறேன்” என லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் போன்ற ஆல்ரவுண்டர்களை அடையாளம் கண்டு, அவர்களது தனித்திறனில் கவனம் செலுத்தும் வகையில் பிசிசிஐ ஊக்கம் அளிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT