Published : 15 May 2024 12:20 PM
Last Updated : 15 May 2024 12:20 PM
சென்னை: இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் திராவிடின் பதவிக் காலம் முடிவு பெறுகிறது. இந்தச் சூழலில் அந்த பொறுப்புக்கான விண்ணப்பங்களை பெற தொடங்கியுள்ளது பிசிசிஐ.
ஸ்டீபன் பிளெமிங்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், ஆஸி.யின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டது. இந்தச் சூழலில் அவர்களை ஸ்டீபன் பிளெமிங் முந்தியுள்ளார்.
நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிளெமிங், பயிற்சியாளராக நீண்ட அனுபவம் கொண்டவராக உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக 2009 முதல் பணியாற்றி வருகிறார். ஐந்து ஐபிஎல் கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபியை அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே வென்றுள்ளது. அது தவிர சூப்பர் கிங்ஸ் அணியின் அமெரிக்க மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் அவர் உள்ளார்.
சில ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரிலும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது அனுபவத்தை வைத்து பார்க்கும் போது அடுத்த பயிற்சியாளராக தேர்வு ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி உடனும் பிசிசிஐ பேசி உள்ளதாக தகவல்.
சர்வதேச கிரிக்கெட்டில் 111 டெஸ்ட், 5 டி20 மற்றும் 280 ஒருநாள் போட்டிகளில் பிளெமிங் விளையாடி உள்ளார். அதன் மூலம் 15319 ரன்கள் எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT