Last Updated : 04 Apr, 2018 05:33 PM

 

Published : 04 Apr 2018 05:33 PM
Last Updated : 04 Apr 2018 05:33 PM

சூழ்நிலைக்குப் பராமுகமாய் எங்கள் தலை மண்ணில் புதைந்திருந்தது: நடத்தை குறித்து ஆஸி.கேப்டன் டிம் பெய்ன் உருக்கம்

தென் ஆப்பிரிக்காவில் தொடரை 3-1 என்று இழந்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தங்களது நடத்தையினால் ஏற்பட்ட சூழ்நிலையில் தீவிரம் புரியாமல் தங்கள் தலைகள் மண்ணில் புதைந்திருந்தன, இப்போது விழித்துக் கொள்ள நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார்.

அதாவது கடந்த 12 மாதங்களாக தங்கள் நடத்தை மக்களிடத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதே புரியாமல் பராமுகமாக இருந்திருக்கிறோம் என்பதைத்தான் டிம் பெய்ன் ‘மண்ணில் புதைந்த தலைகள்’ என்று உருவகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் மாற்றம் வேண்டும், மாறுவதுதான் முறை, அணியின் நடத்தைப் பண்பாட்டில் முன்னேற்றம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் ஆஸ்திரேலிய வீரர்களை கைகுலுக்கச் செய்து நட்பு ரீதியான ஒரு சூழலை உருவாக்கவும் நடத்தையில் மாற்றம் தேவை அதற்கான முதற்படி இது என்பதை உணர்த்தவும் புதிய கேப்டன் டிம் பெய்ன் புதிய முயற்சி மேற்கொண்டது ஆஸ்திரேலிய் ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டை ஈர்த்தது.

இந்நிலையில் டிம் பெய்ன் கூறியிருப்பதாவது:

நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். கடந்த 12 மாதங்களாக சூழ்நிலையின் தீவிரம் புரியாமல் நம் தலைகள் மண்ணில் புதைந்து கிடந்தன. தொடர்ந்து வெற்றி பெற்றால் நாம் நம் இஷ்டப்படி நடக்கலாம். ஆஸ்திரேலிய மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் கடந்த மாதம் நடந்த விவகாரங்கள் ஆஸ்திரேலிய மக்களுக்கு துளியும் பிடிக்கவில்லை என்று நாம் கண்டுபிடித்து கொண்டுள்ளோம். எனவே இதன் பாடம் என்னவெனில், நாம் நம் நடத்தையை மேம்படுத்த வேண்டும் என்பதே.

கடைசி போட்டியில் நாங்கள் மாறிவிட்டோம் என்பதைக் காட்டினோம். தொடர்ந்து இப்படி நடந்து கொள்வோம். புதிய பயிற்சியாளர் வருகிறார், நடந்தது பற்றியும் நடக்கப்போவது பற்றியும் அவர் சில கருத்துகளை நிச்சயம் வைத்திருப்பார்.

எதிரணியினரை மதிப்பதுடன் போட்டி ரீதியாக சவாலாகத் திகழ்வதும் முக்கியம் என்பதை உணர்ந்து விட்டோம். இனி வித்தியாசமாகத்தான் இருக்கும். இதனை விரைவில் கண்டுபிடித்துக் கொள்வோம். திறமை உள்ளது அதனை முறையான வழியில் வளர்த்தெடுத்தால் போதுமானது.

இவ்வாறு கூறினார் டிம் பெய்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x