Published : 14 May 2024 06:29 AM
Last Updated : 14 May 2024 06:29 AM
சென்னை: ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 96 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்த 22 வயதான சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன், நடப்பு சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபார செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார். அப்போது தவறவிட்ட சதத்தை இந்த சீசனில் கடந்த 10-ம் தேதி அகமதாபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விளாசியிருந்தார்.
அந்த ஆட்டத்தில் 51 பந்துகளில் 103 ரன்களை விளாசி மிரளச் செய்திருந்தார் சாய் சுதர்சன். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 25 ஆட்டங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 31 ஆட்டங்களில் ஆயிரம் ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 12 ஆட்டங்களில் விளையாடி 141.28 ஸ்டிரைக் ரேட்டுடன் ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 527 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். 16 சிக்ஸர்கள் பறக்கவிட்டுள்ள அவர், 48 பவுண்டரிகளையும் விரட்டியுள்ளார். எப்போதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் சாய் சுதர்சன். ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிராக அவர், மேற்கொண்ட தாக்குதல் ஆட்டம் அவரது டி 20 ஆட்டத் திறனின் மற்றொரு பரிணாமத்தை உலகுக்கு காட்டியது.
2022-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சாய் சுதர்சன் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். முதல் ஆண்டில் தனது திறனை பட்டை தீட்டிக் கொண்ட அவர், அடுத்த சீசனில் அனைவராலும் பாராட்டக்கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக நடப்பு சீசனில் சாய் சுதர்சனின் ஆட்டத் திறன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
சாய் சுதர்சன் கூறும்போது, “கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது எனது பேட்டிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் முடிவெடுப்பது, விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு, விளையாட்டைப் பற்றிய புரிதல் மேம்பட்டுள்ளது. இது தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்த கொஞ்சம் உதவுகிறது.
எனது பேட்டிங் டைமிங் மற்றும் களத்தில் நிலைப்பெற்று விளையாடுவதை பொறுத்துதான் உள்ளது. இந்த இரண்டையுமே கடைபிடிக்க முயற்சி செய்வேன். கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்ற அனுபவத்தால் திட்டங்களை களத்தில் செயல்படுத்தும் விதம் மேம்பட்டுள்ளதாக உணர்கிறேன். கடந்த சீசனில் ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்துவது கடினமாக இருந்தது. இருப்பினும் இது பேட்டிங்கில் சிறந்து விளங்க எனக்கு வாய்ப்பை வழங்கியது.
கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியது மிகவும் சிறப்பான விஷயம். அது மறக்க முடியாத தொடராகவும் இருந்தது. மேலும் சர்வதேச கிரிக்கெட் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஒரு பேட்ஸ்மேனாக எந்த இடத்தில் மேம்பட வேண்டும் என்பது பற்றிய அறிவையும் தென் ஆப்பிரிக்க தொடர் எனக்கு வழங்கியுள்ளது. இதை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாது” என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் ஹிட்டிங் மற்றும் ஸ்டிரைக் ரேட் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அபிஷேக் சர்மா, சுனில் நரேன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட சில பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட்டை 200 என்ற அளவில் வைத்துள்ளனர். ஆனால் சாய் சுதர்சனோ தனது பாணியிலேயே மட்டையை சுழற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆட்டம் செல்லும் விதத்தில் ஸ்டிரைக் ரேட் முக்கியமானதுதான். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதே முக்கிய குறிக்கோள் என்று கருதுகிறேன்.
240 அல்லது 250 ரன்கள் இலக்கை துரத்துகிறோம் என்றால், தேவைப்படும் ரன்விகிதம் அதிகமாக இருக்கும். சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாட வேண்டும். முன்கூட்டியே ஸ்டிரைக் ரேட் பற்றி சிந்தித்தால், சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாட முடியாது” என்றார்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது விராட் கோலியுடன் உரையாடியது தேவையான தெளிவை கொடுத்ததாக சுதர்சன் கூறினார். தொடர்ந்து அவர் கூறும்போது, “விராட் கோலியுடன் பவர் பிளே குறித்தும், குறைந்த ரிஸ்க்குடன் பந்துவீச்சாளரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் பேசினேன். தோனியுடன் உரையாடும் போது, ரன்கள் எடுக்காத போதும், ரன்கள் சேர்க்கும் போதும் எவ்வாறு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என கேட்டறிந்தேன்” என்றார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் முட்டி போட்டபடி ஷர்துல்தாக்குர் வீசிய பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டது குறித்து சாய் சுதர்சன் கூறும்போது, “எக்ஸ்டிரா கவரில் அடித்த அந்த ஷாட்டை மிகவும் ரசித்தேன். அதேவேளையில் நானும் ஷுப்மன் கில்லும் தீவிர நோக்கத்துடன் விளையாடியதையும் ரசித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஷுப்மன் கில்லுடன் இணைந்து விளையாடி வருகிறேன், கிரிக்கெட் குறித்து களத்திற்கு வெளியே பல உரையாடல்களை நடத்தி வருகிறோம். அவர். மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT