Published : 14 May 2024 06:32 AM
Last Updated : 14 May 2024 06:32 AM
புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லிமைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.769 நிகர ரன் ரேட்டுடன் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்தே லக்னோ அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும்.
லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் 166 ரன்கள் இலக்கை ஹைதராபாத் அணிவிக்கெட் இழப்பின்றி 9.4 ஓவர்களில் அடைந்து வரலாற்று சாதனை படைத்தது. இந்த மோசமான தோல்வியால் லக்னோ அணியின் நிகர ரன் ரேட் மைனஸுக்கு சென்றது. இந்த தோல்வியால் விரக்தியடைந்த லக்னோஅணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயங்கா, மைதானத்தில்வைத்தே கே.எல்.ராகுலை வசைபாடியது சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என தகவல்கள் வெளியாயின. ஆனால் லக்னோ அணி நிர்வாகம் தரப்பில் இருந்து இது உறுதி செய்யப்படவில்லை. எப்படியிருப்பினும் கே.எல்.ராகுல் இதற்குதனது மட்டைவீச்சால் பதிலடி கொடுக்கக் கூடும்.
கே.எல்.ராகுலுடன் குயிண்டன் டி காக்கின் மோசமான பார்மும் அணிக்கு பாதகமாகிஉள்ளது. பவர்பிளேவுக்குள்ளேயே அவர், தனது விக்கெட்டை இழப்பது அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மார்கஸ் ஸ்டாயினிஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பெரிய அளவிலான ஷாட்களை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை உருவாகுகிறது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தீர்வு காணக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க பந்துவீச்சில் மயங்க் யாதவ் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது. இருப்பினும்இன்றைய ஆட்டத்தில் அனைத்து துறையிலும் மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே லக்னோஅணிக்கு வெற்றி கிடைக்கும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய போட்டி கடைசி லீக் ஆட்டமாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிவெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமே.
டெல்லி அணி தனது கடைசிஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்விஅடைந்திருந்தது. இந்த ஆட்டத்தில் தடை காரணமாக கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்குவது டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT