Published : 02 Apr 2018 02:41 PM
Last Updated : 02 Apr 2018 02:41 PM
பந்தை சேதப்படுத்தும் தவறு செய்து 12 மாதங்கள் தடை அனுபவித்து வரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை மக்களும், அரசும் மன்னிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய தேவாலயங்களும், அதன் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகையின் போது சிட்னியில் நடந்த சிறப்பு தேவாலயப் பிரார்த்தனையின்போது, இந்த வேண்டுகோளை பாதிரியார்கள் மக்கள் முன்வைத்தனர்.
கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், 9 மாதங்கள் பான்கிராப்டுக்கு தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் உத்தரவிட்டது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிட்னி வந்த ஸ்மித், வார்னர் இருவரும், ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்து,மக்களிடமும், ரசிகர்களிடமும் பொதுமன்னிப்பு கோரினார்கள்.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இயேசு உயிர்தெழுந்து வந்த நாளில் மகிழ்ச்சியான மனநிலையில் மக்கள் இருக்கும் போது, ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய தேவாலயங்கள் மக்களுக்கும், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சிட்னி நகரில் உள்ள புனித ஆன்ட்ரூ கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று பிஷப் கிளன் டேவிஸ் மக்களுக்கு திருப்பலி உரையாற்றினார். அப்போது, 3 ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் மன்னிப்பு அளிக்கக் கோரினார். அப்போது அவர் பேசியதாவது:
ஈஸ்டர் பண்டிகை மக்களுக்கு நம்பிக்கையையும், அதேசமயம், தவறு செய்தவர்களுக்கு பாவமன்னிப்பும் அளிக்க வேண்டும். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் தார்மீக தர்மத்தை மீறு தவறுகள் செய்த ஸ்மித், பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோரை அனைவரும் மன்னிக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தவறு செய்திஇருக்கிறோம் என்பதை உற்று நோக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் தோல்விகளைச் சந்தித்துள்ளோம். ஸ்மித், வார்னர், கேமரூன் ஆகியோருக்கும் அவர்களின் வாழ்க்கையில் இது தோல்வியான சம்பவங்கள்தான்.
கிரிக்கெட் விளையாட்டை தீவிரமாக நேசிக்கும் நம்நாட்டின் மீது இந்த குற்றச்சாட்டு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பது தெரியும். ஆனால், தாங்கள் செய்த தவறுகளுக்கு ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகிய 3 பேரும் மன்னிப்பு கோரி விட்டார்கள். ஆதலால், அவர்களுக்கு நாமும், அரசும் மன்னிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த தேவாலாயங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் உள்ள தேவாலயங்களும் ஸ்மித், பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோரை மன்னிக்க கோரியுள்ளன.
52 சதவீதம் கருத்து
மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ஆஸ்திரேலிய ரசிகர்கள், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு சீசனுக்கு 3 பேரையும் சஸ்பெண்ட் செய்வதே போதுமானது என்று 52 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது, ஒரு ஆண்டு தடை விதிப்பது மிகவும் அரிதாகவே தெரிவித்துள்ளனர்.
ரூ.30 கோடிக்கும் மேல் இழப்பு
இதற்கிடையே பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தால், நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் ரூ.30 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஸ்பான்ஷர் அளித்து வந்த மெக்லாகன் பன்ட் மேனேஜ்மென்ட், குவான்டாஸ் ஏர்லைன்ஸ் உள்ளிட்டோர் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT