Published : 11 May 2024 01:29 PM
Last Updated : 11 May 2024 01:29 PM
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிலியன் எம்பாப்பே, கிளப் அளவில் தற்போது தான் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த சீசனினுடன் அணியில் இருந்து வெளியேறுகிற தனது முடிவை சமூக வலைதளத்தில் அவர் அறிவித்துள்ளார்.
25 வயதான அவர், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பிரான்ஸ் நாட்டுக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் பிரதான ஸ்ட்ரைக்கராக உள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற வீரர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரராகவும் அறியப்படுகிறார்.
கடந்த 2017 சீசன் முதல் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த அணி பிரான்ஸ் நாட்டின் கிளப் அணி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக 305 ஆட்டங்களில் ஆடியுள்ளார். மொத்தம் 255 கோல்கள் பதிவு செய்துள்ளார்.
“பிஎஸ்ஜி அணியுடன் இது எனது கடைசி ஆண்டு. இந்த முறை ஒப்பந்தத்தை நான் நீட்டிக்க மாட்டேன். இந்த சாகச பயணம் அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்ஜி அணியுடன் 12 பிரதான கோப்பைகளை அவர் வென்றுள்ளார். இதில் ஆறு லீக் 1 பட்டங்கள், மூன்று பிரெஞ்சு கோப்பை, பிரெஞ்சு சூப்பர் கோப்பை மற்றும் பிரெஞ்சு லீக் கோப்பை போன்றவை அடங்கும். நடப்பு UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிஎஸ்ஜி அணி அரையிறுதி வரை முன்னேறி இருந்தது.
“இதில் நிறைய எமோஷன் அடங்கியுள்ளது. பிரெஞ்சு தேசத்தில் சிறந்த கிளப் அணியின் உறுப்பினராக பல ஆண்டுகள் நான் இருந்தது எனக்கு பெருமை. உலகின் மிகச் சிறந்த கிளப் அணிகளில் ஒன்று. நான் இதை அறிவிப்பதில் இவ்வளவு கடினம் இருக்கும் என கருதவில்லை. எனக்கு புதிய சவால் தேவை என கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன்” என எம்பாப்பே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதலே பிஎஸ்ஜி கிளப் அணியில் இருந்து எம்பாப்பே வெளியேறுவது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது அதை அவரே முறைப்படி அறிவித்துள்ளார். இருந்தும் அவர் எந்த அணிக்கு செல்ல உள்ளார் என்ற அறிவிப்புகள் வெளியாகவில்லை. ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT