Published : 09 May 2024 11:14 AM
Last Updated : 09 May 2024 11:14 AM
மும்பை: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2004-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் சாதனையை படைத்திருந்தார் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. இந்த சூழலில் தனது சாதனையை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் லாரா மற்றும் ஜெய்ஸ்வால் இடையிலான ஆத்மார்த்தமான அன்பு நிறைந்த பந்தம் உருவாகியுள்ளது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லாரா இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாடி வந்தார். கடந்த சீசனுக்கு பிறகு தான் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை ஜெய்ஸ்வால் பெற்றார்.
“கிரிக்கெட் உலகில் எனது சாதனைகளை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் சிறந்த ஆட்டத்திறனை பெற்றுள்ளார். இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். சிறந்த வீரர். அவரை முதல் முறை பார்த்தபோது எனக்கு அவருடன் பிணைப்பு ஏற்பட்டது.
அந்த முதல் சந்திப்பு ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு ஒரு அதிகாலை நேரத்தில் நடந்தது. கேம் சார்ந்து கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார். மிகவும் பணிவானவர். எங்களுடனான உரையாடல் அவரை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றும் வகையில் அமைந்தது. கிரிக்கெட் குறித்து பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்” என லாரா தெரிவித்துள்ளார்.
அதே போல இந்தியாவை சேர்ந்த மற்றொரு இளம் இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா வசமும் தனக்கு அபிமானம் உண்டு என லாரா தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பயிற்சியாளராக பயணித்த போது அபிஷேக் சர்மாவுடன் புரிதல் கொண்ட பிணைப்பை கொண்டிருந்ததாக லாரா தெரிவித்துள்ளார். மேலும், தனது சாதனை முறியடிக்கப்படுவதை தான் பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT