Published : 08 May 2024 05:47 AM
Last Updated : 08 May 2024 05:47 AM
புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மோதியது. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தை முடித்துக் கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சார்ட்டர் விமானம் மூலம் திங்கள் கிழமை மாலை 5.45 மணி அளவில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பயணித்த விமானம் இரவு 7.25 மணி அளவில் கொல்கத்தாவில் தரையிறங்க வேண்டும். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானத்தை கொல்கத்தாவில் தரையிறக்க முடியாததால் சார்ட்டர் விமானம் முதலில் குவாஹாட்டிக்கும் பின்னர் வாராணசிக்கும் திருப்பி விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரவு 9.43 அளவில் குவாஹாட்டியில் இருந்து சார்ட்டர் விமானம் மூலம் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் கொல்கத்தாவுக்கு புறப்பட அனுமதி கிடைத்தது. விமானம் இரவு 11 மணி அளவில் கொல்கத்தாவில் தரையிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல முறை முயற்சி செய்த போதும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நடுவானிலேயே விமானம் வாராணசிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து வாராணசியில் உள்ள ஓட்டலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இரவில் தங்க வைக்கப்பட்டனர். இதன் பின்னர் நேற்று காலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சாட்டர் விமானம் மூலம் கொல்கத்தா வந்து சேர்ந்தனர்.
ஐபிஎல் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகளை குவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 11-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 13-ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும், 19-ம் தேதி குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் மோதுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT