Published : 07 May 2024 08:57 AM
Last Updated : 07 May 2024 08:57 AM
லக்னோ: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் மோசமான பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங்கால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 39 பந்துகளில் 81 ரன்கள் (6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
பிலிப் சால்ட் 32, அங்கிரிஷ் ரகுவன்ஷி 32, ஆந்த்ரே ரஸ்ஸல் 12, ரிங்கு சிங் 16, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 23, வெங்கடேஷ் ஐயர் 1, ரமன்தீப் சிங் 25 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3, யஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், யுத்விர் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். 236 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
கே.எல்.ராகுல் 25, அர்ஷின் குல்கர்னி 9, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 36, தீபக் ஹூடா 5, நிக்கோலஸ் பூரன் 10, ஆயுஷ் பதோனி 15, ஆஷ்டன் டர்னர் 16, கிருணல் பாண்டியா 5, யுத்விர் சிங் ராணா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3, ஆந்த்ரே ரஸ்ஸல் 2, மிட்செல் ஸ்டார்க், சுனில் நரேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மொத்தம் 8 வெற்றிகளைக் குவித்து 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் 16, சென்னை சூப்பர் கிங்ஸ் 12, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 புள்ளிகளுடன் அதற்கடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தோல்வி குறித்து லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து சவாலை அளித்தது. பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. அடித்து விளையாட முற்பட்டபோது விக்கெட்களை விரைவாக இழந்தோம்.
இன்றைய ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் எங்களின் மோசமான செயல்பாட்டால் தோல்வி அடைந்தோம். குறிப்பாக பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டோம். பவர்பிளே ஓவர்களில் சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்திவிட்டனர். அவர்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதைக் களத்தில் கண்டோம். எங்களது இளம் பந்துவீச்சாளர்களால், அவர்கள் தரும் அழுத்தத்தை கையாள முடியவில்லை. எதிரணி வீரர்கள் மிகச்சிறப்பான ஷாட்களை விளையாடி ரன்களைக் குவித்தனர். எங்களுக்கு இந்த நாள் வெற்றிக்கான நாளாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment