Published : 06 May 2024 03:00 PM
Last Updated : 06 May 2024 03:00 PM
புதுடெல்லி: விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினால் விமர்சகர்கள் மீது எரிந்து விழுகிறார் கோலி என்று சுனில் கவாஸ்கர், கோலியை சாடியதோடு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனத்தையும் கடும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
கோலி 14வது 15வது ஓவர் வரை ஆடி 118 தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார் என்று அவர் அதுபோன்று ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் போதுதான் விமர்சகர்களாகிய வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இதை விடுத்து கோலி விமர்சகர்களுக்கு எதிராக ஆத்திரத்துடன் பேசியதை எத்தனை முறை போட்டுக்காட்டுவீர்கள் என்று சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் என்பது ஒரு வியாபாரம், ரியாலிடி ஷோ போன்றது, இதில் ரியால்டி ஷோவை பெரிய தொகைக்கு ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ள நிறுவனம் உருவாக்கப்பட்ட ஹீரோக்களை விமர்சனம் செய்வதை எப்படி அனுமதிக்கும்? இது கவாஸ்கருக்குப் புரியாததல்ல, ஆனாலும் அவர் இன்னும் பழைய விழுமியங்களை தன்னிடம் கொண்டவர் என்பதால் இத்தகைய கேள்விகளைக் கேட்கின்றனர்.
இக்காலத்திய பெரிய வீரர்களின் வருவாயையும் விளம்பர ஒப்பந்தங்களையும் நிர்வகிக்கும் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் மீடியாக்களில் பெரிய வீரர்களின் புகழைப்பரப்ப வேண்டியவற்றைச் செய்து வருவதாகவும் சிலபல வட்டாரங்கள் கூறுவது உண்மையோ பொய்யோ, இப்போது விராட் கோலியின் பதிலை மட்டும் ஏகப்பட்ட முறை கிளிப் போட்டு காட்டுவது குறித்து கவாஸ்கர் விமர்சிக்கும் போது நமக்கு அதன் நோக்கமும் பின்னணியும் லேசாகப் புரிகிற மாதிரி தெரிகிறது.
சுனில் கவாஸ்கர் கூறுவது என்ன? - “கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 118 ஆக இருக்கும்போதுதான் வர்ணனையாளர்கள் அவர் ஆட்டத்தை விமர்சிக்கின்றனர். நான் அதிகப் போட்டிகளைப் பார்ப்பதில்லை, ஆகவே மற்ற வர்ணனையாளர்கள் இது குறித்து என்ன மாற்று கருத்தைக் கூறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. கோலி தொடக்கத்தில் இறங்கி 14-15வது ஓவரில் ஆட்டமிழக்கிறார் என்றால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 118 தானா? இதற்காக கரகோஷம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது வித்தியாசமான எதிர்பார்ப்பு. ஆம் அது வித்தியாசம்தான்.
இவர்கள் எல்லாம், ‘நாங்கள் வெளியிலிருந்து வரும் கூச்சல்களைக் கண்டு கொள்வதில்லை’ என்று சொல்வார்கள். அப்படியா! நல்லது, பின் எதற்காக பதில் அளித்தாராம் அவர். நாங்களும் கொஞ்சம் கிரிக்கெட் ஆடியுள்ளோம், நிறைய அல்ல. எங்களுக்கு அஜெண்டாக்கள் எதுவும் இல்லை. நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதைத்தான் பேசுகிறோம். எங்களுக்கு பிடித்த வீரர்கள், பிடிக்காத வீரர்கள் என்றெல்லாம் கிடையாது.. அப்படியே இருந்தாலும் என்ன நடக்கிறதோ அதை வைத்துத்தான் பேசுகிறோம்” என்று விராட் கோலி குறித்துக் கூறிய சுனில் கவாஸ்கர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது தன் விமர்சனத்தைத் திருப்பினார்.
“ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விராட் கோலி விமர்ச்கர்கள் மீது பாய்வதை திரும்பத் திரும்பக் காட்டும்போது அவர் பாய்வது உங்கள் வர்ணனையாளர்கள் மேல்தான் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்? ஒரு நபர் உங்கள் வர்ணனையாளர்களைச் சிறுமைப் படுத்துகிறார், அதை பெரிதாகக் காட்டிக்கொண்டே இருப்பது நல்ல விஷயமல்ல. போதிய அளவு காட்டி விட்டீர்கள் அனைவரும் போதிய அளவு அதைப் பார்த்து விட்டனர், பிறகென்ன? இன்னொரு முறை நீங்கள் அவர் பேசியதைக் காட்டினால் நான் உண்மையில் கடும் அதிருப்தியடைவேன்” என்றார் சுனில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT