Published : 06 May 2024 01:25 PM
Last Updated : 06 May 2024 01:25 PM

சேசிங்கில் எந்த நிலையிலும் ஆட்டத்தில் இல்லாத லக்னோ - ரமந்தீப் சிங் நாள்! | ஐபிஎல் அலசல்

லக்னோ மைதானம் தான் இந்த ஐபிஎல் தொடரில் குறைந்த ஸ்கோர்களுக்கான மைதானமாக இருந்தது ஆனால் அதுவும் நேற்று கொல்கத்தாவால் உடைக்கப்பட்டது. 235 ரன்களைக் குவித்தனர். மீண்டும் சேசிங்கில் எந்தத் தருணத்திலும் வெற்றியை நோக்கி ஆட முடியாமல் முடக்கப்பட்டது லக்னோ. ஒரு அறுவையான ஆட்டமாக மாறிவிட்டது. 98 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கிறது லக்னோ என்றால் கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதலிடம்தானே செல்லும்!

சுனில் நரைன் 39 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 81 ரன்களை விளாசி இந்த சீசனில் தலையாய பவர் ப்ளே ஹிட்டராக எழுச்சி பெற்றார். ஒரு கட்டத்தில் மிடில் ஓவர்களில் தன் இஷ்டத்திற்கு சிக்ஸர்களை அடித்துக் கொண்டிருந்தார் நரைன். பில் சால்ட் 14 பந்துகளில் 32, ரகுவன்ஷி 26 பந்துகளில் 32. அய்யர் 15 பந்துகளில் 23. கடைசியில் ரமன் தீப் சிங் 6 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 25 என்று ஸ்கோரை எங்கோ கொண்டு போய் விட்டனர். லக்னோவில் இவ்வளவு பெரிய ஸ்கோரை விரட்டுவது எப்போதும் கடினமே.

அதோடு ரமன் தீப் சிங் நேற்று 2 கேட்ச்களை எடுத்தார். அதில் லக்னோ தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி, மிட்செல் ஸ்டார்க்கின் நல்ல வேகப்பந்தை ஏதோ ரிச்சர்ட்ஸ் போல் ஹை பிளிக் ஆடும் மிகவும் அதீத முயற்சியில் லீடிங் எட்ஜ் எடுக்க ரமன் தீப் ஆஃப் திசையில் பின்னாலேயே சென்று ரஸலுக்கு எளிதாக அமைந்திருக்கும் கேட்சை டைவ் அடித்துப் பிடித்தார். ஒரு பிரமிப்பூட்டிய கேட்ச் ஆக அமைந்தது.

ராகுலும் ஸ்டாய்னிஸும் பேட் செய்த போது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, ஆனால் இருவருமே 33பந்துகளில் தான் 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இது போதாது. இந்த ஜோடியை உடைத்த பிறகே லக்னோ இலையுதிர்வது போல் உதிர்ந்து போனது. 9 விக்கெட்டுகளை 67 ரன்களுக்கு இழந்தது. வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

நேற்று ரமன் தீப் சிங் தினமாக அமைந்தது என்று சொல்வதற்குக் காரணம், கொல்கத்தாவின் பினிஷிங் டச்களை பிரமாதமாகச் செய்தார். இறங்கியது முதல் அவரது ஷாட்கள் பெற்றுக்கொடுத்த ரன்கள், 2, 6, 1, 6, 4, 6 என்று ஆறே பந்துகளில் 25 ரன்களை விளாசினார். பிறகு ஒரு அற்புதமான கேட்சையும் கே.எல்.ராகுலுக்கு ஒரு சுலபமான கேட்சையும் பிடித்தார்.

சேசிங் தொடங்கும் போதே ஓவருக்கு 12 ரன்கள் என்றால் லக்னோ எங்கே போகும்? நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ரஸல் பவுலிங்கையெல்லாம் அடித்து நொறுக்கி 236 ரன்களை சேஸ் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என்றே லக்னோ ஆடியது. பவர் ப்ளே முடிந்தவுடனேயே தேவைப்படும் ரன் விகிதம் எகிறத் தொடங்கியது. ஒரு கணத்தில் கூட சேசிங்கில் திட்டமிடல் இல்லை. லக்னோ பிட்ச் ஸ்லோ பிட்ச், இதில் கேகேஆரை 235 ரன்களை அடிக்கவிட்டு மோசமான தோல்வி கண்டது லக்னோ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x