Published : 06 May 2024 12:26 PM
Last Updated : 06 May 2024 12:26 PM
நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பார்த்தது போலவே கணிப்புகளுக்கு ஏற்ப சிஎஸ்கே வென்றதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. பஞ்சாப் கிங்ஸ் உடனான 2 ஆட்டங்களில் ஒன்றில் பஞ்சாப் வென்றால் இன்னொன்றில் அவர்கள் தோற்பார்கள் என்பது தெரிந்ததே. அதோடு நேற்று சிஎஸ்கே தோற்றிருந்தால் எல்.எஸ்.ஜி, மேலே செல்ல சிஎஸ்கே 5ம் இடத்துக்கு இறங்கியிருக்கும். அங்கிருந்து பிளே ஆஃப் செல்வது கடினம்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்து 200 ரன்கள் பக்கம் குவித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே தட்டுத் தடுமாறியிருக்கும். அதற்குப் பதில் சிஎஸ்கேவை முதலில் பேட் செய்ய அழைத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி நினைத்திருக்கும் என்று சிந்திக்க முடியவில்லை. ஏனெனில் 2வதாக பஞ்சாப் இலக்கை விரட்டும் போது துஷார் தேஷ்பாண்டேவுக்கு பந்துகள் அருமையாக ஸ்விங் ஆகின என்பது ஒரு புறம். அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் நீங்கலாக மற்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஆட்டமிழந்த விதம் போட்டித்தனமான ஆட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்க முடியவில்லை. தூக்கி எறிந்து விட்டுச் சென்றனர். ஆனால் நேற்று தோனி இறங்கியவுடன் பெரிய சப்தம், ஆரவாரம் எழுச்சி ஆகியவை மண்ணோடு மண்ணாகிப் போனது, முதல் பந்திலேயே கிளீன் பவுல்டு. நல்ல லெந்தில் கொண்டு வந்து போட்டுக்கொடுத்தால் மட்டுமே தோனியினால் அடிக்க முடிகிறது.
இத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய தோனி முன்காலை நீட்டி குறுக்கே போட்டு அந்தப் பந்தை நேர்மறை டெக்னிக்குடன் சந்திக்கத் தெரியாதா என்ன? தோனிக்கு ஆர்வம் போய் விட்டது. அதனால்தான் 9-ம் நிலையில் இதுவரை இல்லாதவாறு நேற்று சிஎஸ்கேவுக்காக அந்த டவுனில் இறங்கியுள்ளார். மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தோனிக்கு முன்பாக களமிறங்குகின்றனர் என்பது யார் எடுக்கும் முடிவு என்பது தெரியவில்லை.
உடனடியாக வர்ணனையில் இருந்த இர்பான் பதான், இது என்ன காரியம்? இந்த டவுனிலா ஒரு சீனியர் வீரர் இறங்குவது, பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றால் தோனியின் பங்கு என்னவாக இருக்கும் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்:
“9ம் நிலையில் தோனி இறங்குவதெல்லாம் சிஎஸ்கேவுக்கு வேலைக்கு ஆகாது. அணிக்கு இது உதவாது. அவருக்கு 42 வயதாகிறது ஆனாலும் நல்ல பார்மில் தான் இருக்கிறார். தோனி 4-5 ஓவர்களாவது ஆட வேண்டும். அவர் இதுவரை செய்ததை செய்து கொண்டிருக்க முடியாது, அவர் முன்னால் இறங்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்தார். யாராவது தோனியிடம் தைரியமாகச் சென்று ‘கம் ஆன் மேட் 4 ஓவர் ஆடுங்கள்’ என்று சொல்ல வேண்டும்” என்றார் பதான். ஹர்பஜன் சிங்கும் காட்டமாக தோனி மீது விமர்சனத்தை வைத்தார்:
“9ம் நிலையில்தான் தோனி இறங்குவார் என்றால் அவர் தேவையில்லை. பிளேயிங் லெவனில் தோனிக்குப் பதில் ஒரு வேகப்பந்து வீச்சாளரைச் சேர்க்கலாம். தோனிதான் முடிவுகளை எடுப்பவர், ஆனால் அவரே 9ம் நிலையில் இறங்கி தன் அணியை கைவிடலாமா. தாக்கூர் அவருக்கு முன்னால் இறங்குகிறார். தாக்கூரால் தோனி போல் ஷாட்களை ஆட முடியாது. தோனி ஏன் இந்தத் தவறை தொடர்ந்து செய்து வருகிறார்? தோனியின் அனுமதியில்லாமல் எதுவும் அங்கு நடக்காது, ஆகவே அவர் இவ்வளவு பின்னால் இறங்குவது என்பது வேறொருவரின் ஆணைப்படி நடக்கிறது என்பதை நான் நம்ப மாட்டேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT