Published : 02 Apr 2018 08:06 PM
Last Updated : 02 Apr 2018 08:06 PM

டிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு

ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்க அணி தன் 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 612 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் உடைந்து நொறுங்கிப்போயுள்ள ஆஸ்திரேலியாவை மேலும் களத்தில் வாட்டி எடுத்து விட்டது தென் ஆப்பிரிக்கா, டுபிளெசிஸ் 178 பந்துகளில் 18 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 120 ரன்களையும் ஆஸ்திரேலியாவை வதைக்கும் டீன் எல்கர் 250 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்தார். இந்த வதைப்பு போதாதென்று கடைசியில் பவுமா (35 நாட் அவுட்), பிலாண்டர் (33 நாட் அவுட்) சேர்ந்து 71 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால் இந்த சிதைப்பிலும் பாட் கமின்ஸ் தான் வேறொரு லீகில் உள்ள பவுலர் என்று அதியற்புதமாக வீசி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், முதல் இன்னிங்சிலும் கமின்ஸ் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டிக்ளேர் எப்போது என்று ஆஸி.அணியை வெறுப்பேற்றிய தொடர் பேட்டிங்:

கேப்டன் டுபிளெசிஸ் ஆஸ்திரேலியாவைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவ்வளவு வசையை எதிர்கொண்டிருப்பார் போலிருக்கிறது, அதனால் அணியின் முன்னிலை 400, 500 என்று சென்ற போதும் டிக்ளேர் பற்றி யோசிக்காமல் அவர் தொடர்ந்து தேநீர் இடைவேளை வரை ஆடிக்கொண்டேயிருந்தார்.

காலக்கெடு இல்லாத காலக்கட்டத்தில்தான் டெஸ்ட் போட்டி ஒன்றில் 500க்கும் மேல் 4வது இன்னிங்சில் அடிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் டுபிளெசிஸ் எந்த அடிப்படையில் இன்னிங்சை நீட்டி முழக்கியது ஆஸ்திரேலியாவை சுத்தமாக மனரீதியாகக் காலி செய்யும் நோக்கத்துக்காக இருக்க வாய்ப்புள்ளது.

டீன் எல்கர் விரைவில் ரன் எடுக்க வேண்டும் என்ற கதியில் ஆடவில்லை, தடுப்பாட்ட வெறுப்பேற்றினார், அவரால் அடிக்க முடியவில்லை என்பதல்ல விஷயம் ஏனெனில் அரைசதம் எடுக்க மிட்செல் மார்ஷ் பந்தை லாங் ஆன் தலைக்கு மேல் சிக்ஸ் தூக்கினார். ஆனால் அரைசதம் எடுக்க 199 பந்துகளை அவர் எதிர்கொண்டார். கடைசியில் 81 ரன்களில் ஸ்லாக் செய்துதான் நேதன் லயனிடம் வீழ்ந்தார். குவிண்டன் டி காக் 4 ரன்களில் கமின்ஸிடம் எல்.பி.ஆனார்.

இந்தத் தொடரில் கடுமையாகச் சொதப்பி 20 ரன்களையே அதிகபட்சமாக எடுத்து இந்தச் சதத்துக்கு முன்பாக இந்தத் தொடரில் மொத்தம் 55 ரன்களையே எடுத்த டுபிளெசிஸ் சதம் எடுக்கும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ரன் விகிதத்தையும் கூட்டினார், அதுவும் பாட் கமின்ஸை கவர் பாயிண்ட் மேல் அடித்த சிக்ஸ் அவரது ஆக்ரோஷம் என்பதை விட முன்னதாக கமின்ஸ் பந்தில் விரலில் அடிவாங்கிய வெறிதான் என்று தெரிகிறது. தன் 8வது சதத்தை எடுத்து முடித்தார். 120 ரன்களில் இதே கமின்ஸிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

612 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா 21/0. இன்று இன்னமும் குறைந்தது 29 ஓவர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x