Published : 03 May 2024 12:36 PM
Last Updated : 03 May 2024 12:36 PM
மும்பை: டி20 உலகக்கோப்பை இந்திய அணித்தேர்வில் வெளிப்படையாகவே பலருக்கும் எழுந்த அதிருப்தி ரிங்கு சிங்கை அணியில் எடுக்காததே. ரிங்கு சிங் விவகாரம் பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஷிவம் துபே வேகப்பந்து வீச்சிற்கு எதிராக சரியாக ஆட முடியாதவர், ஷிவம் துபே பந்து வீச முடிந்தால் மட்டுமே அவரது தேர்வு நியாயப்பாடு எய்தும்.
இப்படியிருக்கையில் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல ஃபினிஷராக உருவெடுத்து வரும் ரிங்கு சிங்கை முளையிலேயே கிள்ளி எறிவது போல் எறிந்திருப்பது பெரிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரிங்கு சிங்கை ஒதுக்கியது பற்றிய கேள்விகளுக்கு ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகார்க்கர் இருவருமே பதில் சொல்லத் திணறினார்கள், திருப்திகரமான எந்த ஒரு பதிலையும் அவர்களால் தர முடியாதது, ஐபிஎல் சிஎஸ்கே லாபி ஷிவம் துபேவுக்கு சாதகமாக முடிவெடுக்க வைத்ததோ எனும் ஐயங்களை கிளப்பியுள்ளது.
ரிங்கு சிங் இதுவரை 11 டி20 சர்வதேச போட்டிகளில் 176.23 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இவரைப்போய் உட்கார வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பிசிசிஐ மீது காட்டங்களையும் அதிருப்திகளையும் வெறுப்புகளையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் வான்கடேயில் ரோஹித் சர்மா, டி20 உலகக்கோப்பை செய்தியாளர்கள் சந்திப்பை முடித்தவுடன் ரிங்கு சிங்குடன் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வளைய வருகின்றன.
மைதானத்தில் ரிங்கு சிங்கிடம் ரோஹித் சர்மா ஸ்ரேயஸ் அய்யரிடம் பேசியதோடு, கேகேஆர் ட்ரஸ்ஸிங் ரூமில் கவுதம் கம்பீரையும் சந்தித்துப் பேசினார். அதாவது விமர்சன மழை கவுதம் கம்பீரிடமிருந்து நிச்சயம் வரலாம் என்ற நிலையில் ரிங்கு சிங்கை ஒதுக்கியது குறித்தும், அணிச்சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ரிங்கு சிங்கிற்கு இடமில்லை என்றும் இது ரிங்கு சிங்கின் தவறில்லை என்றும் ரோஹித் சர்மா பேசியிருக்கலாம் என்று ஊடகங்கள்’ தெரிவிக்கின்றன.
அகர்கர் தனது தெளிவில்லாத பதிலில் ரிங்கு சிங் ஒதுக்கல் பற்றிக் கூறிய போது, “ரிங்கு சிங் நீக்கம் தான் நாங்கள் பேசித்தீர்த்த மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. ரிங்கு சிங்கின் தவறல்ல, அணிச்சேர்க்கைக்கு ஷிவம் துபே சரியாகத் தோன்றினார், ஷுப்மன் கில்லை எடுக்காததும் அவர் தவறல்ல.
மேலும் 2 ரிஸ்ட் ஸ்பின்னர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் தேவை ஒரு கூடுதல் பவுலரும் தேவை இதனால் ரிங்கு சிங்கை ரிசர்வில் வைக்க வேண்டியதாயிற்று, இது துரதிர்ஷ்டமே” என்றார் அகர்கர்.
என்ன நியாயப்பாடு கற்பித்தாலும் ஷிவம் துபேவை லெவனில் சேர்க்க முடியாது போனால் நிச்சயம் பெரிய சர்ச்சைகளுக்கு இடமளிக்கும் என்பதை ரோஹித் சர்மா கவனத்தில் கொள்வது நலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT