Published : 03 May 2024 07:01 AM
Last Updated : 03 May 2024 07:01 AM

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் கொல்கத்தா அணி மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானஆட்டத்தில் 261 ரன்களை இலக்காக கொடுத்த போதிலும் கொல்கத்தா அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி கண்டிருந்தது.

பேட்டிங்கில் அதிரடி அணுகுமுறையை கையாளும் கொல்கத்தா அணி பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். 8 ஆட்டங்களில் 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ள மிட்செல் ஸ்டார்க் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை வழங்குவது பலவீனமாக பார்க்கப்படுகிறது.

11 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ஹர்ஷித் ராணா இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை உள்ளது. ஏனெனில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் போரெலை ஆட்டமிழக்கச் செய்த போது ஹர்ஷித் ராணா விதிமுறைகளை மீறி நடந்து கொண்டார். இதனால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா கொல்கத்தா அணியில் இடம் பெற முடியாது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான வைபவ் அரோரா, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் வருண் சக்ரவர்த்தியும் பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும்.

இந்த சீசனில் ரிங்கு சிங்குவிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படாததும் இதற்கு காரணமாக அமைந்தது. இதனாலேயே டி20 உலகக் கோப்பை தொடரில் ரிங்கு சிங் 15 பேர் கொண்ட பிரதான அணியில் இடம் பெற முடியாமல் போனது. இதனால் அவர், மீது இன்றைய ஆட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சியுள்ள ஆட்டங்களில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

இன்றைய ஆட்டம் உட்பட மும்பை அணிக்கு 4 ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் அனைத்திலும் மும்பை அணி வெற்றி பெற்றாலும் லீக் சுற்றை 14 புள்ளிகளுடனே நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே மும்பை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.

பேட்டிங்கில் ஒருங்கிணைந்த செயல்திறன் இல்லாதது அணியை வெகுவாக பாதித்துள்ளது. 2 அரை சதங்களுடன் 343 ரன்கள் சேர்த்துள்ள திலக் வர்மா, 158.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 315 ரன்கள் எடுத்துள்ள ரோஹித் சர்மா ஆகியோருடன் மற்ற பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. இஷான் கிஷன் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் பவர்பிளே ஓவருக்குள்ளேயே ஆட்டமிழந்து வெளியேறுபவராக இருக்கிறார்.

2 அரை சதங்கள் அடித்துள்ள சூர்யகுமார் யாதவிடம் இருந்து தொடர்ச்சியான செயல்பாடு இல்லை. கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து மட்டை வீச்சு, பந்து வீச்சில் வெற்றிக்கான பங்களிப்பு இல்லாதது பெரிய அளவிலான ஏமாற்றமாக அமைந்துள்ளது. லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரசிகர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலாவது ஹர்திக் பாண்டியா பார்முக்கு திரும்புவது அவசியமாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x