Published : 08 Apr 2018 12:36 AM
Last Updated : 08 Apr 2018 12:36 AM

டிவைன் பிராவோவின் பிரமிப்பூட்டும் சாகச அதிரடி: தோல்வியின் விளிம்பிலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் முதல் போட்டியில் டிவைன் பிராவோவின் தனிமனித பிரமிப்பூட்டும் சாகச அதிரடியில் 169/9 என்று 1 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நம்ப முடியாத வெற்றியை ஈட்டியுள்ளது.

பிராவோவின் நம்ப முடியாத திகைப்பூட்டும் அதிரடி!

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸும் தொடக்கச் சரிவிலிருந்து மீண்டு இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், குருணால் பாண்டியா அதிரடியில் 165/4 என்று ஒரு நல்ல ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வது ஓவர் முடிவில் 119/8 என்று தோல்வியின் விளிம்பில் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கை 19 பந்துகளில் 29 ரன்களுடன் ஆடி வந்த டிவைன் பிராவோதான்.

18 பந்துகளில் 47 ரன்கள் தேவை, வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 15.66. அப்போதுதான் ரோஹித் சர்மா, முஸ்தபிசுரிடம் கொடுக்காமல் ரன்களை தொடக்கத்திலிருந்தே கொடுத்து வந்த மெக்லினாகனிடம் கொடுக்க, ரோஹித் சர்மா, மும்பை ரசிகர்களின் நகங்கள் காலியாகும் அதிரடி ஆரம்பமானது.

அந்த ஓவரின் முதல் பந்தை இம்ரான் தாஹிர் எதிர்கொள்ள 1 ரன் எடுத்துக் கொடுத்தார். ஸ்ட்ரைக் பிராவோவிடம் வந்தது.

முதல் பந்து மோசமான பந்து என்று கூற முடியாது தரையிலிருந்து பெயர்த்து பவுலர் தலைக்கு மேல் நேராக மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார் பிராவோ. அடுத்த பந்து பேடில் விழுந்தது, ஆனாலும் அடிப்பதற்கு போதிய இடமோ காலமோ இல்லாத நிலையிலும் ஒரே தூக்குத் தூக்கினார் மிட்விக்கெட்டில் மீண்டுமொரு அதிர்ச்சி சிக்ஸ். அடுத்த பந்து லாங் ஆனில் தட்டிவிட்டு 2 வேக ரன்களை எடுத்தார். அடுத்த பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரே இழுப்பு இழுக்க பவுண்டரிக்குப் பறந்தது. 18வது ஓவரின் கடைசி பந்தை சிங்கிளுக்குத் தட்டி விட்டு 19வது ஓவரில் பேட்டிங்குக்கு வந்தார் பிராவோ. மெக்லினாகன் ஓவரில் 20 ரன்கள்!

19வது ஓவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா வீச முதல் பந்து யார்க்கர் மிஸ் ஆக சற்றே ஒதுங்கிக் கொண்டு லாங் ஆஃப் மேல் மிகப்பிரமாதமான ஒரு சிக்சரை அடித்தார் பிராவோ, அடுத்த பந்தும் யார்க்கர் மிஸ் ஆகி புல்டாஸ் ஆக மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்ஸர். அடுத்த பந்து சிங்கிளாக இருந்திருந்தால் இம்ரான் தாஹிர் ஸ்ட்ரைக்குக்கு வந்திருப்பார், ஆனால் ஓவர் த்ரோவில் 2வது ரன் வந்தது. அடுத்ததாக பும்ராவின் ஸ்லோ யார்க்கர் சரியாக விழ மட்டையை பிராவோ கீழே இறக்க பந்து ஸ்டம்பில் பட்டது, ஆனால் பைல்கள் விழவில்லை, மும்பையின் துரதிர்ஷ்டம், சென்னையின் அதிர்ஷ்டம். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸாக அமைய மிட்விக்கெட்டில் மீண்டும் பந்து சிக்சருக்குப் பறந்தது. அடுத்த பந்து ரவுண்ட் த விக்கெட்டில் பும்ரா வீச ஷார்ட்டாக வைடாக வீசினார் பிராவோ அடிக்க ரோஹித்திடம் கேட்ச் ஆனது. அப்போது இந்த ஷாட்டை அடித்திருக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் 7 பந்துகளில் 7 ரன்கள்தான் தேவைப்பட்டது.

பிராவோ 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீச வந்தார். 13வது ஓவரில் இடது காலில் காயம் ஏற்பட்டு பெவிலியன் சென்ற கேதார் ஜாதவ் மீண்டும் களமிறங்கினார். 7 ரன்கள் தேவை என்ற நிலையில் முஸ்தபிசுர் வீசிய முதல் 3 பந்துகளில் ரன்கள் வரவில்லை, மும்பைக்கு நம்பிக்கை பிறந்தது. அப்போதுதான் ஒரு ஏ.பி.டிவில்லியர்ஸ் ஷாட் ஒன்று ஜாதவ்வுக்குக் கைகொடுத்தது, முஸ்தபிசுர் வீச லேசாக ஆஃப் திசையில் நகர்ந்து மண்டியிட்டு மட்டையை பந்திற்கு கொடுத்து பைன் லெக் மேல் ஒரு தூக்குத் தூக்கினார் அது சிக்ஸ் ஆனது ஆச்சரியம்தான்.

2 பந்து 1 ரன் எடுத்தால் வெற்றி. ரோஹித் சர்மா அனைவரையும் முன்னால் கொண்டு வந்தார், ஆனால் ஜாதவ் கவர் திசையில் அருமையான பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல்-க்கு வந்து முதல் போட்டியிலேயே, அதுவும் தோல்வியின் வாயிலிருந்து ஆட்டத்தைப் பிராவோ பிடுங்கி வர அபாரமான வெற்றி பெற்றது.

இளம் லெக் ஸ்பின்னர் மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா அபாரம்!

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஷாட் தேர்வு, அடிப்பதற்கு சரியான பவுலர்களை தேர்வு செய்யாதது என்று ஏகப்பட்ட தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை மடமடவென இழந்தது.

தொடக்கத்தில் ஷேன் வாட்சன் (16), அம்பாட்டி ராயுடு (22) ஆகியோர் 22 பந்துகளில் 27 ரன்கள் என்ற நம்பிக்கைத் தொடக்கத்தைக் கொடுத்தனர். அப்போது ஹர்திக் பாண்டியாவிடம் வாட்சன் வீழ்ந்தார், மெதுவான் விரல் பந்து அது வாட்சன் கணிக்கவில்லை லாங் ஆனில் கேட்ச் ஆனார். ரெய்னா 4 ரன்களில் மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்துக்கு பலியானார்.

ஹர்திக் பாண்டியா மிடில் ஸ்டம்பில் ஷார்ட் ஆக வீச ஒதுங்கிக் கொண்டு புல்ஷாட் ஆடிய ரெய்னா மிட் ஆனில் குருணால் பாண்டியாவிடம் ஆட்டமிழந்தார்.

 

அடுத்ததாக இளம் லெக்ஸ்பின்னர் மார்க்கண்டே, 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆடிவந்த ராயுடுவை வீழ்த்தினார், ராயுடு தேவையில்லாமல் ஒரு ஸ்வீப் ஷாட்டை ஆட கூக்ளியில் எல்.பி.ஆனார்.

அடுத்த அதிர்ச்சி கேப்டன் தோனி, இவர் 5 ரன்களில் மார்க்கண்டேயின் கூக்ளியில் பின்னால் சென்று கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். களநடுவர் அதை எப்படி நாட் அவுட் என்று கூறினார் எனத்தெரியவில்லை, தோனிக்கு அவுட் கொடுக்க பயந்திருப்பார். ஆனால் ரிவியூவில் தோனி நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.

ஜடேஜாவுக்கு இந்த ஆட்டம் மோசமாக அமைந்தது, பவுலிங்கில் ஒரே ஓவர் 9 ரன்கள் பேட்டிங்கில் 12 ரன்களில் முஸ்தபிசுர் கட்டரை மிக மோசமாக ஆடி வெளியேறினார். 5/75 என்று ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கேதார் ஜாதவ்வுடன் பிராவோ இணைந்தார். ஜாதவ் பவுண்டரி வறண்டு போனபோது மார்க்கன்டேயை இறங்கி வந்து ஒரு சிக்ஸ் தூக்கினார். பிராவோ இறங்கி மார்க்கண்டேயை நேராக மிக அழகாக ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் தேவையில்லாமல் மார்க்கண்டே பந்தை மேலேறி வந்து அடிக்கப்போய் ஸ்டம்ப்டு ஆனார். 13வது ஓவரில் கேதார் ஜாதவ் இடது தொடை சதைப்பிடிப்பினால் பெவிலியன் திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பிக்கை அற்றுப் போனது. ஹர்பஜன் சிங் இறங்கி பந்தை நன்றாக டைமிங் செய்தார், ஒரு பவுண்டரி அடித்தார். அதுவும் மிஸ்பீல்ட். ஹர்பஜன் சிங்கும் 8 ரன்களில் மெக்லினாகன் பந்தை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மார்க் உட் 1 ரன்னில் ஹர்திக் பாண்டியாவின் 3வது விக்கெட் ஆனார். அப்போதுதான் 17 ஓவர்கள் முடிவில் 119/8. பிராவோ மட்டும் 29 ரன்களில் கிரீசில் இருந்தார், அதன் பிறகுதான் மெக்லினாகன், பும்ரா என்று விளாசித்தள்ளி வெற்றிக்கு அருகில் கொண்டு விட்டு அவுட் ஆனார். பிறகு மீண்டும் இறங்கிய கேதார் ஜாதவ் மிக அருமையான பைன்லெக் சிக்ஸ், கவர் பவுண்டரி மூலம் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்ட நாயகன் பிராவோ. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணமான மெக்லினாகன் 4 ஓவர்கள் 44 ரன்கள், பும்ரா 4 ஓவர்கள் 37 ரன்கள், முதல் 2 ஓவர்களில் 8 ரன்கள்தான். பாண்டியா 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மார்க்கண்டே 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நம்ப முடியாத வெற்றி.

2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஒரு அபாரத் தொடக்கம் இந்த முதல் போட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x