Last Updated : 04 Apr, 2018 04:13 PM

 

Published : 04 Apr 2018 04:13 PM
Last Updated : 04 Apr 2018 04:13 PM

மேட்ச் பிக்சிங்கைத் தடுக்க என்ன வழி? ஐபிஎல் போட்டிகளை அனுமதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி மனு

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டங்களைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை உறுதி செய்யும்வரை பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டங்களை தடுக்க விதிகளை உருவாக்க உத்தரவிட கோரிய இந்த மனுவை அடுத்து மத்திய அரசு மற்று பி.சி.சி.ஐ. பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.பி எஸ். அதிகாரி சம்பத்குமார் மேற்கொண்ட பொதுநல மனுவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மேட்ச் பிக்சிங், சூதாட்டங்கள் நடைபெற்றதாக புகாரின்படி சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சூதாட்ட புகாரில் தாவூத் இப்ராஹிமின் தம்பி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை தான் விசாரித்து வந்ததாகவும், தனக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் லோதா மற்றும் முட்கல் குழுக்களை அமைக்கப்பட்டது.

நீதிபதி லோதா குழுவின் பரிந்துரை படி சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆயுட்காலம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடையும், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்பட்டன. ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சூதாட்டங்களை தடுக்கும் விதமாக நீதிபதி முத்கல் கமிட்டி மற்றும் நீதிபதி லோதா கமிட்டியின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் விதமாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கிரிக்கெட் சூதாட்டங்கள் மற்றும் அது தொடர்பான முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ. மற்றும் மத்திய விளையாட்டு துறை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக கிரிக்கெட் ரசிகளையும் மக்களையும் முட்டாள்களாக்குகிறார்கள். ஐ.பி.எல் போட்டிகளில் எந்த ஒரு நிகழ்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை, சூதாட்டம் நிகழ்வதற்கு ஏதுவாக அனைத்து செயல்பாடுகளும் மறைமுகமாகவே நடைபெறுகின்றன. எனவே சூதாட்டங்களை தடுக்கும் விதமாக எந்தவிதமான விதிகளோ அல்லது அது தொடர்பான உத்தரவுகளோ செயல்படுத்தப்படாமல் உள்ளன. எனவே இந்த விசாரணை முடியும் வரை ஐ.பி.எல். போட்டிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், மத்திய அரசு பி.சி.சி.ஐ. உள்ளிட்டவை போட்டிகள் மற்றும் போட்டிகள் சார்ந்த மேட்ச் பிக்சிங் சூதாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும் விதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, நீதிபதி செல்வம் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய எல்லைகள் தாண்டி சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள், இதில் வரும் பணத்தை இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்யப்படுவதாக மேலும் இந்த முறைகேடுகள் தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் முட்டாள்களாக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய உள்துறை, விளையாட்டு துறை அமைச்சகங்கள் வரும் 13 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல்13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x