Published : 30 Apr 2024 11:40 PM
Last Updated : 30 Apr 2024 11:40 PM
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது லக்னோ.
இந்தப் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன் மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் 5-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இஷான் கிஷன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். டிம் டேவிட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். துஷாரா வீசிய முதல் ஓவரில் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
தொடர்ந்து களத்துக்கு வந்த ஸ்டாய்னிஸ் உடன் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். அவர் 28 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார். லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது. 16 மற்றும் 17-வது ஓவரில் முறையே 6 மற்றும் 1 ரன் எடுக்கப்பட்டது.
18-வது ஓவரில் முதல் பந்தில் டர்னரை போல்ட் செய்தார் கோட்ஸி. இருந்தும் அந்த ஓவரில் 9 ரன்கள் கொடுத்தார். கடைசி 12 பந்துகளில் 13 ரன்கள் லக்னோவின் வெற்றிக்கு தேவைப்பட்டது.
19-வது ஓவரின் முதல் பந்தில் ஆயுஷ் பதோனி ரன் அவுட் ஆனார். மூன்றாவது நடுவரின் டிவி ரீப்ளேயில் கிரிஸை கடந்தபோது பேட் தரையில் படாதது போல இருந்தது. அதனால் அவுட் கொடுக்கப்பட்டது. அது லக்னோ அணிக்கு சங்கடம் தரும் வகையில் அமைந்தது. அந்த ஓவரில் 10 ரன்கள் எடுத்தது லக்னோ.
கடைசி ஓவரில் 3 ரன்கள் லக்னோவின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை நபி வீசினார். முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ. 19.2 பந்துகளில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது லக்னோ. மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக இது அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு லக்னோ முன்னேறியுள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளின் மூலம் 12 புள்ளிகளுடன் அந்த அணி உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், இரண்டாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment