Published : 30 Apr 2024 07:46 AM
Last Updated : 30 Apr 2024 07:46 AM
சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 3 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்துகளில், 98 ரன்களும் டேரில் மிட்செல் 32 பந்துகளில், 52 ரன்களும் ஷிவம் துபே 20 பந்துகளில், 39 ரன்களும் விளாசினர். தோனி 2 பந்தில் 5 ரன்கள் சேர்த்தார்.
213 ரன்கள் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 ஓவர்களை வீசி 27 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.
பவர் பிளேவுக்குள் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக்சர்மா, அன்மோல்பிரீத் சிங் ஆகியோரை துஷார் தேஷ்பாண்டே ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார். இந்த சரிவில் இருந்து அந்த அணியால் மீளமுடியாமல் போனது.
சிஎஸ்கே அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 3-வது இடத்துத்துக்கு முன்னேறியது. வெற்றிக்குப் பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:
ஒரு சில ஆட்டங்களில் நாங்கள் உத்வேகத்தை இழந்த இடம் பவர்பிளேவில் விக்கெட்கள் வீழ்த்தாததுதான். எதிரணியை பின்நோக்கி நகர்த்துவதற்கு ஒரே வழி இதுதான். அந்தவகையில் பவர்பிளேவில் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்து வீசினார். அவரது கடின உழைப்புக்கான பலன் கிடைத்துள்ளது.
ரவீந்திர ஜடேஜாவையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் பனிப் பொழிவு இருந்த நிலையில் அவர், 4 ஓவர்களை வீசிய அவர், ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். என்னை பொறுத்தவரையில் இது அபாரமான செயல்திறன்.
எப்போதுமே சதம் அடிப்பது குறித்து நினைக்க மாட்டேன். 220 ரன்கள் வரை அணியின் ஸ்கோரை கொண்டு செல்ல முயற்சி செய்ய முடியுமா? என்பதில்தான் கவனம் செலுத்துவேன். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஒரு சில ஷாட்களை நான் தவறவிட்டேன்.
இன்னிங்ஸ் இடைவேளையின் போது இதுகுறித்து விவாதித்தேன். அப்போது இதுதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறினேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக வெற்றிகரமாக ஆட்டத்தைநிறைவு செய்தோம். கடந்த ஆட்டத்தில் அங்கும், இங்குமாக சில தளர்வான பந்துகளை வீசினோம். மேலும் பீல்டிங்கிலும் சில தவறுகளை செய்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் திட்டங்களுடன் சரியாக செயல்பட்டோம்.
பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டோம். இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இம்பாக்ட் பிளேயர் விதியால் சராசரியான ஸ்கோர் என்ன என்பதை அறிய முடியாது. இதனால் எப்போதும் கூடுதலாக 10 முதல் 20 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT