Published : 29 Apr 2024 06:44 AM
Last Updated : 29 Apr 2024 06:44 AM

வில் ஜேக்ஸ், விராட் கோலி விளாசலில் பெங்களூரு வென்றது எப்படி? @ ஐபிஎல்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ரித்திமான் சாஹா 5 ரன்னில் ஸ்வப்னில் சிங் பந்திலும், கேப்டன் ஷுப்மன் கில் 16 ரன்களில் கிளென் மேக்ஸ்வெல் பந்திலும் ஆட்டமிழந்தனர். 7 ஓவர்களில் குஜராத் 2 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது சாய் சுதர்சனுடன் இணைந்த ஷாருக்கான் அதிரடியாக விளையாடினார்.

மட்டையை சுழற்றிய ஷாருக்கான் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசிய நிலையில் முகமது சிராஜ் பந்தில் போல்டானார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 45 பந்துகளில் 86 ரன்கள் விளாசியது.

இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும், நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 84 ரன்களும் விளாசியதால் சற்று வலுவான இலக்கை குஜராத் அணியால் கொடுக்க முடிந்தது.

201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பெங்களூரு அணியானது வில் ஜேக்ஸ், விராட் கோலி ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலி 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் வில் ஜேக்ஸ் 41 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 100 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 24 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார்.

பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் தொடர்கிறது.

அதேவேளையில் குஜராத் அணி 6-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x