Published : 28 Apr 2024 12:30 PM
Last Updated : 28 Apr 2024 12:30 PM

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி: குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர்

செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

சென்னை: கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை,கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை முதல்வர் வழங்கினார். இந்த சந்திப்பின்போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அதிகாரிகள், குகேஷின் பெற்றோர் உடனிருந்தனர்.

ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் குகேஷுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூடிட வாழ்த்து தெரிவித்தார்.

குகேஷ் தெரிவிக்கையில், “தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையும் மற்றும் போட்டி முடிந்த பிறகு பரிசுத்தொகையும் உடனடியாக வழங்கியது மிகவும் மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் தான், என்னால் தற்போது இந்த சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடிந்தது” என்று கூறி நன்றி தெரிவித்தார்.

முன்னதாக,கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டினார்.

14-வது சுற்று ஆட்டத்தில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x