Published : 27 Apr 2024 05:44 AM
Last Updated : 27 Apr 2024 05:44 AM
லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் அபாரமான பார்மில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த ராஜஸ்தான் அணி 5-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அதன் பின்னர் ஹாட்ரிக் வெற்றியை குவித்தது.
அதேவேளையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சிறந்த முறையில் விளையாடி வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த மார்ச் 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வி கண்டிருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.
ராஜஸ்தான் அணியின் பேட்டிங் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரை மட்டுமே பெரிதும் சார்ந்திருந்த நிலையில் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 பந்துகளில் 104 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லர் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
8 ஆட்டங்களில் 318 ரன் குவித்துள்ள ரியான் பராக், 314 ரன்கள் சேர்த்துள்ள சஞ்சு சாம்சன் ஆகியோரும் லக்னோ அணியின் பந்து வீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும். இவர்களுடன் ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், துருவ் ஜூரல் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணி கூடுதல் வலுப்பெறும். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுவேந்திர சாஹல் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்களை வேட்டையாடிய சந்தீப் சர்மா, லக்னோ அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
பதிலடி கொடுக்கும் முயற்சி ஒருபுறம் இருந்தாலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காண்பதிலும் கவனம் செலுத்தக்கூடும். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் வீழ்த்திய உற்சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது லக்னோ அணி. சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி மார்கஸ் ஸ்டாயினிஸ் விளாசிய 124 ரன்களின் உதவியால் வெற்றி கண்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் குயிண்டன் டி காக், கே.எல்.ராகுல்ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்த போதிலும் ஸ்டாயினிஸ் தனிநபராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு வெற்றியை வசப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியாக விளையாடி இருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பந்து வீச்சு கூடுதல் வலுப்பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT