Published : 26 Apr 2024 10:38 AM
Last Updated : 26 Apr 2024 10:38 AM
ஒருவழியாக ஆர்சிபி அணி வெற்றியை நீண்ட இடைவெளிக்கு பிறகு ருசித்துள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்குப் பிறகு 2வது வெற்றியை ஈட்டியுள்ளது. நேற்று சன்ரைசர்ஸ் அதிரடி பேட்டர்கள் விடுப்பில் சென்றுவிட்டனர் போலும். இம்பாக்ட் வீரர் ஸ்வப்னில் சிங் ஆர்சிபி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். ஏனெனில் பேட்டிங்கில் 6 பந்துகளில் 12 ரன்கள் அவரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிறகு பந்து வீச்சில் மார்க்ரம், அதிரடி மன்னன் கிளாசன் ஆகியோரை வீழ்த்தியதுதான் ஆர்சிபி வெற்றியின் திருப்பு முனை கணங்களாகும்.
இதை விடவும் முக்கியத் தருணம் வில் ஜாக்ஸ், காட்டடி மன்னன் ட்ராவிஸ் ஹெட்டையும் இவருக்கு சற்றும் சளைக்காத அபிஷேக் சர்மாவை யஷ் தயால் வீழ்த்தியதும் ஆர்சிபிக்கு எப்போதும் இல்லாத வகையில் பந்து வீச்சில் நல்ல தொடக்கத்தை அளித்தது. மேலும் முகமது சிராஜ் உள்ளிட்ட மற்றவர்கள் அதிரடி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் 4 ஓவர்கள் 20 ரன்கள் என்று தப்பினர்.
ஆனால் கம்மின்ஸ் கூறும்போது, “சேஸிங்கில் மட்டுமல்ல, இலக்கை நிர்ணயிப்பதிலும் தங்களது அதிரடி அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை” என்றார். “ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அதற்காக அணுகுமுறையை மாற்றுவதாக இல்லை” என்பது பாட் கம்மின்ஸின் நிலைப்பாடு.
இதற்கிடையே, வெற்றிக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ், "தோற்றுத் தோற்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெற்றிக்குப் பிறகு எப்படிப் பேசுவது என்பதையே மறந்து விட்டேன்" என்று சூசகமாக ஒரு ஜோக்கடித்தார்.
“பிரசெண்டேஷனில் எப்படி பேசுவது என்பதையே மறந்து விட்டேன். ஒவ்வொரு போட்டியின் முடிவின் போதும் ஏதோ பேசி விட்டு சென்று விடுவேன். முந்தைய சன் ரைசர்ஸ் போட்டியிலும் 260 வரை வந்தோம், கொல்கத்தாவிடம் 1 ரன்னில் தோற்றோம். நெருக்கமாக வருகிறோம். ஆனால் வெல்ல முடியவில்லை. அணி வீரர்களிடத்தில் நம்பிக்கையை வரவழைக்க வேண்டுமெனில் அதற்கு வெற்றிதான் ஒரே வழி.
தோல்விகளை அடைந்து கொண்டே போலியாக நம்பிக்கை ஊட்டிக் கொண்டிருக்க முடியாது. தோல்வி நம் மனநிலையை பாதிக்கும். இதுவரை 50% - 60% ஆற்றலுடன் தான் ஆடினோம். இது நம்பிக்கை அளிக்க போதுமானதல்ல. ரஜத் படிதார் அடுத்தடுத்து அரைசதம் அடித்தது அவருக்கு நல்ல நிறைவையளித்திருக்கும்.” என்றார் டுபிளெசிஸ்.
கம்மின்ஸ் பேசும்போது, “சேஸிங்கில் அதிக விக்கெட்டுகளை மடமடவென்று இழந்தோம். இந்தத் தோல்வி குறித்து அதிகம் யோசிக்க விரும்பவில்லை. நாங்கள் இப்படி பேட் செய்வதுதான் எங்களுக்குப் பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் இது தகையாது. ஆனால் இதுதான் எங்கள் வழி, அதிரடிதான் எங்கள் முறை” என்றார் திட்டவட்டமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT