Published : 25 Apr 2024 06:59 AM
Last Updated : 25 Apr 2024 06:59 AM

உலக சாம்பியன்ஷிப்பை தாண்டியும் பயணிக்க வேண்டியது இருக்கிறது: குகேஷ் சிறப்பு நேர்காணல்

17 வயதான சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்நிலையில் டி.குகேஷ் கூறியதாவது:

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றபோது உணர்ச்சிகள் அதிகம் இருந்தன. போட்டி முடிவடைந்து சில நாட்கள் ஆகிவிட்டதால் தற்போது சகஜமான நிலைக்குவந்துவிட்டேன். எனது அப்பா மருத்துவர், அம்மா நுண்ணுரியியலாளர். நான் மருத்துவர்கள் குடும்பத்தை சேர்ந்தவன் என்றாலும் எனக்கு செஸ் விளையாட்டின் மீதுதான் அதிக ஆர்வம். 7 வயது முதல் செஸ்விளையாடி வருகிறேன்.

அப்பா, அம்மா பொழுது போக்குக்காக செஸ் விளையாடுவார்கள். அதை பார்த்துதான் செஸ் விளையாட்டின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அதன் பின்னர் பள்ளியில் படிக்கும் போது அங்கு செஸ் விளையாட்டில் சேர்ந்தேன். அங்கிருந்துதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்க தொடங்கினேன். விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்ததை தொடர்ந்து எனது திறமை வெளிப்படத் தொடங்கியது.

எனது செஸ் வாழ்க்கையில் கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்றது மிகப்பெரிய நிலை. இத்துடன் இந்த பயணம் முடிவடையவில்லை. உலக சாம்பியன் பட்டத்தை வென்றாலும் இந்த பயணம் முடிவடையப் போவது இல்லை. உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தாண்டியும் அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

செஸ் விளையாட்டுக்காக நான் தியாகம் செய்ததைவிட எனது பெற்றோர் தியாகம் செய்ததுதான் அதிகம். 2 வருடங்களுக்கு முன்னர் கடுமையான நிதி பிரச்சினையை சந்தித்தோம். அதை அவர்கள் சிரமப்பட்டு சமாளித்தார்கள். உலகளவில் நடைபெற்ற போட்டிகளில் நான் பங்கேற்பதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்காக அவர்கள், அனைத்தையும் செய்து வருகிறார்கள்.

சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் விளையாடுவதால் 17 வயது இளைஞனாக எனது வாழ்க்கையில் நான் எதையும் தவறவிடவில்லை. குடும்பத்துடன் அதிக பிணைப்பு கொண்டவன் நான். நண்பர்களுடன் நேரம் செலவிடுவேன். அந்த வகையில் எதையும் நான் விட்டுவிடவில்லை என்றே கருதுகிறேன். எல்லோரையும் போன்றே எனது வாழ்க்கையும் உள்ளது.

போட்டிக்கு முன்னதாக என்னை கொஞ்சம் தயார்படுத்திக் கொள்வேன். போட்டிகளில் பங்கேற்கும் நாட்களில் வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே உணவு அருந்திவிடுவேன். அதன் பின்னர் சற்று ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் போட்டிகளில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன்.குகேஷுக்கு என்று எந்தவித ஸ்பெஷலும் இல்லை. அனைத்து நாட்களிலும் எனது வழக்கமான திட்டங்களை தொடர்வேன். இது மிகவும் முக்கியமானது.

உலக சாம்பியன்ஷிப்பை எந்த நாட்டில் வைத்து விளையாட வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் தற்போது இல்லை. சரியான மனநிலையில் விளையாடும் போது போட்டி எங்கு நடைபெற்றாலும் கவலை இல்லை. பொதுவாக எனக்கு ஸ்பெயின் நாட்டிலும், இந்தியாவிலும் விளையாடுவதற்கு அதிகம் பிடிக்கும். போட்டி நடைபெறும் இடம் இன்னும் ரகசியமாகவே இருக்கிறது. இதனால் நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

செஸ் போட்டிக்காக தமிழகத்தில் பல்வேறு சிறப்பு விஷயங்கள் நடைபெற்றுள்ளன. கரோனா தொற்று காலக்கட்டத்தில் செஸ் போட்டிக்கு அதிகளவில் ஆதரவு இருந்தது. தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டதாக இருக்கட்டும், கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு நான் தகுதி பெற்றதாக இருக்கட்டும், சென்னை ஓபன் போட்டி நடத்தப்பட்டது என அரசிடம் இருந்து செஸ் விளையாட்டுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஆதரவு தொடர்ந்தால் தமிழகத்தில் செஸ் விளையாட்டு மேலும் பிரபலம் அடையும்.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தாயகம் திரும்பியதும் சிறிது ஓய்வுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு எந்த முறையில் தயாராக வேண்டும் என்பது குறித்து திட்டமிடுவேன். சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிசெய்வேன். இவ்வாறு டி.குகேஷ் கூறினார்.

- சுதர்ஷன் நாராயணன், டொராண்டோவில் இருந்து சிறப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் கண்ட நேர்காணல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x