Published : 23 Apr 2024 12:36 PM
Last Updated : 23 Apr 2024 12:36 PM
பஞ்சாப் பாடியாலாவைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் அபாரமாக வீசி வரும் ஒரு அற்புத பவுலர்தான் இந்த சந்தீப் சர்மா. தோனி, கோலி, ரோஹித், சூரியகுமார் போன்றோர் மீது வெறி பிடித்து வீழ்ந்து கிடக்கும் இக்கால ஐபிஎல் ரசிகர்களுக்கு சந்தீப் சர்மாவைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சந்தீப் சர்மாவுக்கு வயது 31. ஜூலை 17, 2015-ல் இந்திய டி20 அணியில் ரஹானே கேப்டன்சியில் அறிமுகமான இவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 2 நாட்களில் முடிந்து போனது. அதே ஆண்டு ஜூலை 19ம் தேதி கடைசி டி20 போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பயன்படுத்திக் கொள்ளப்படாமலேயே சந்தீப் சர்மா ஒழிக்கப்பட்டு விட்டார்.
ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவருக்கென்று தனி இடமுண்டு. நேற்று அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்த சீசனின் சிறந்த பந்து வீச்சு இது. 180 டி20 போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நேற்றைய இவரது பந்து வீச்சு மும்பையை முடக்கியதால்தான் பிற்பாடு ஜெய்ஸ்வாலின் அற்புதமான சதத்துக்கு உதவுவதாக அமைந்ததோடு, ராஜஸ்தான் ஐபிஎல் அட்டவணையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவும் காரணமாக அமைந்தது.
2014 ஐபிஎல் தொடர் முதல் 2020 வரை சந்தீப் சர்மா, கடினமான பவர் ப்ளேயில் அற்புதமாக வீசியவர். இந்தக் காலக்கட்டத்தில் அவர் பஞ்சாப் கிங்ஸிலும், பிறகு சன்ரைசர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில்தான் பவர் ப்ளேயில் இவர் 49 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நிகழ்ந்தது. அனைத்தையும் விட முக்கியமானது ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாகவே சந்தீப் சர்மா கொடுத்தார் என்று கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் 2021, 2022 தொடர்களில் சந்தீப் சர்மா சோடை போனார். வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். பவர் ப்ளேயில் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இதனையடுத்து 2023 ஏலத்தில் இவரை எடுக்க ஆளில்லை. ஆனால் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை அழைத்தது. பவர் ப்ளேவுக்காக மட்டுமல்ல டெத் ஓவர்களை வீசுவதிலும் தன் திறமைகளை சந்தீப் வளர்த்துக் கொண்டதற்காக. இப்போது நடுவிரலில் பிடித்து வீசும் நக்கிள் பந்து, கட்டர்களை, ஸ்லோ பவுன்சர்களை அதிகம் வீசுகிறார்.
ஜாம்பவான்களை வீழ்த்துவதில் வல்லவரான சந்தீப் சர்மா இதுவரை விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்களை அதிக முறை வீழ்த்திய பவுலர் ஆவார். இது ஒரு அரிதான விஷயம்.
விராட் கோலியை 15 இன்னிங்ஸ்களில் 7 முறை வீழ்த்தியுள்ளார். கோலியை அதிக முறை வீழ்த்திய ஐபிஎல் பவுலர்களில் சந்தீப்புக்கே முதலிடம். அதேபோல் ரோஹித் சர்மாவோ சந்தீப் சர்மாவுக்கு எதிராக 7.60 என்ற சராசரியைத்தான் வைத்துள்ளார். ஐந்து முறை ரோஹித், இவரிடம் வீழ்ந்துள்ளார். அதேபோல் சூரியகுமார் யாதவ்வை 8 இன்னிங்ஸ்களில் 4 முறை வீழ்த்தியுள்ளார் சந்தீப். இவரை விளாசிய ஒரே பேட்டர் கிறிஸ் கெய்ல்.
பெரிய அளவில் கூடுதல் முயற்சி செய்து வேகமாக வீசவெல்லாம் சந்தீப் சர்மா முயற்சி செய்ய மாட்டார். போதுமான வேகத்துடன் பந்துகளை மாற்றி, மாற்றி வேறு வேறாக வீசுவார். அதுதான் அவரது பலம். தன்னுடைய பலம் பலவீனம் அறிந்த ஒரு பவுலர், ஒரு யுட்டிலிட்டி பவுலர். பாகிஸ்தானில் ஒரு பவுலர் இப்படி இருந்தார், அவர்தான் அசார் மஹ்மூது. இவரைப் பார்க்கும்போது அசார் மஹ்மூது நியாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT