Published : 22 Apr 2024 09:59 AM
Last Updated : 22 Apr 2024 09:59 AM

சாப்மேன் காட்டடியில் பாகிஸ்தானை பந்தாடிய நியூஸிலாந்து!

கோப்புப் படம்

ராவல்பிண்டியில் நேற்று (ஏப்.21) நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை நியூஸிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ளது. பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

புதிய வீரர்களைக் கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணியின் இந்தக் காட்டடி வெற்றி பாகிஸ்தான் ஓய்வறையில் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நியூஸிலாந்தின் அதிரடி மார்க் சாப்மேன் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 87 ரன்கள் விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

179 ரன்கள் இலக்கை விரட்டும் போது பிக் ஹிட்டர்களான டிம் ராபின்சன் (28 ரன்கள், 19 பந்து 5 பவுண்டரி), டிம் செய்ஃபர்ட் (21 ரன்கள், 16 பந்து 1 பவுண்டரி 1 சிக்ஸ்) அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இருவருமே முறையே நசீம் ஷா மற்றும் அப்பாஸ் அஃப்ரீடியிடம் பவுல்டு ஆகி வெளியேறினர். இதில் டிம் ராபின்சன் நசீம் ஷாவின் இன்ஸ்விங்கிங் யார்க்கரில் காலியாக, செய்ஃபர்ட் பந்தை மட்டையினால் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

இரண்டு விக்கெட்டுகள் விழுந்து விட்ட பிறகே அனுபவமற்ற வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தானின் பிரமாத பந்து வீச்சில் நியூஸிலாந்தினால் வெற்றி பெற இயலாது என்ற எண்ணமே ஏற்பட்டது. ஆனால் மார்க் சாப்மேன் தனது பாகிஸ்தான் அனுபவத்தை மீட்டெடுத்து ஆடினார். இலக்கு பெரியதல்ல என்பதால் பவர் ஹிட்டிங் என்ற பெயரில் பந்தைப் பார்க்காமல் மட்டையை சுழற்றும் ஆட்டம் ஆடாமல் நிதானமாக ஷாட்களை அற்புதமாகத் தேர்வு செய்து ஆடினார் சாப்மேன்.

ஆனால் சாப்மேனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது நசீம் ஷா இவரது ஸ்வீப் ஷாட் கேட்சைக் கோட்டை விட்டார். இதுதான் பாகிஸ்தான் தோல்விக்குப் பிரதான காரணமானது. ஏன் பாகிஸ்தான் அணிக்கு இது அதிர்ச்சி எனில், ஷாஹின் அஃப்ரீடியையும், நசீம் ஷாவையுமே சாப்மேன் பின்னி எடுத்து விட்டார். 15வது ஓவரில் ஷாஹின் அஃப்ரீடியை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாசினார் சாப்மேன்.

உடனே நசீம் ஷாவைக் கொண்டு வந்தார், ஆனால் அந்தோ பரிதாபம்,, இவரை 3 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார் சாப்மேன். இந்த ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டதில் ரன் ரேட் கடுமையாகக் குறைந்தது. இவரும் ஃபாக்ஸ்கிராப்ட்டும் (31) சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 117 ரன்களை 12 ஓவர்களில் விளாசினர்.

முன்னதாக பேட்டிங் பிட்ச் என்று பாபர் அசாம் வர்ணித்த பிட்சில் பாகிஸ்தான் பெரிய இலக்கை எடுக்கத் தவறியது. நியூஸிலாந்து முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தது. ஆனால் நியூஸிலாந்து பவுலர்களான ஜாக் ஃபவுக்ஸ், இஷ் சோதி, ரூர்கே ஆகியோர் பாகிஸ்தானை முடக்கினர். பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற புகழ் பெற்ற ஜோடியே பவர் ப்ளேவுக்குப் பிறகு 6 ஓவர்களில் 36 ரன்களையே எடுக்க முடிந்தது. பாபர் அசாமை கேப்டன் பிரேஸ்வெல் வீழ்த்தினார்.

ஒருவழியாக இர்பான் கான் 20 பந்துகளில் 30 ரன்களையும் ஷதாப் கான் 20 பந்துகளில் 41 ரன்களையும் விளாசி ஸ்கோரை 178 ரன்களுக்கு உயர்த்தினர். இஷ் சோதி ஆகச்சிறப்பாக வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் பிட்சில் 178 ரன்கள் போதாது என்பதை மார்க் சாப்மேன் நிரூபித்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x