Published : 21 Apr 2024 05:17 AM
Last Updated : 21 Apr 2024 05:17 AM
லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 177 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 பந்துகளை மீதம் வைத்து 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் கே.எல்.ராகுல் 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் குயிண்டன் டி காக் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து மிரட்டியது. சென்னை அணியின் பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பவர்பிளேவில் சென்னை அணி 54 ரன்களை தாரை வார்த்தது. துஷார் தேஷ்பாண்டே,முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10.50 ரன்களுக்கு மேல் வழங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதிஷா பதிரனா வால் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை வழங்கிய நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இது ஒருபுறம் இருக்க பேட்டிங்கில் சிஎஸ்கே அணி நடு ஓவர்களில் தடுமாற்றம் அடைந்தது. பவர்பிளேவில் 51 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே அணியால் அடுத்த 9 ஓவர்களில் மேற்கொண்டு 54 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.
இந்த 9 ஓவர்கள் ரன் குவிப்பில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிக்கட்ட ஓவர்களில் மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்களும், தோனி 9 பந்துகளில் 28 ரன்களும் விளாசியதன் காரணமாகவே சிஎஸ்கே அணியால் 177 ரன்கள் இலக்கை கொடுக்க முடிந்தது. ஆனால் பந்து வீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது,“ பேட்டிங்கில் இறுதிப்பகுதியில் நன்றாக முடித்தோம். இதைவிட சிறப்பாக நிறைவு செய்யும்படி கேட்டிருக்க முடியாது. ஆனால் பவர்பிளே முடிந்த பிறகு 15 ஓவர் வரை பெரிய அளவில் நாங்கள் ரன்கள் சேர்க்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தோம். 10 முதல் 15 ரன்களை குறைவாக சேர்த்து விட்டோம். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. ஆட்டத்தின் பிற்பாதியில் பனிப்பொழிவு இருந்தது.
இதனால் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். பந்து வீச்சில் பவர்பிளேவில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். பவர்பிளேவில் விக்கெட்கள் வீழ்த்தினால்தான் எதிரணிக்கு பின்னடைவை கொடுக்க முடியும். விரைவில் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். லக்னோ அணிக்கு எதிராக அடுத்து சேப் பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறோம். இதற்கு சிறந்த முறையில் தயாராவோம். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT