Published : 20 Apr 2024 11:53 PM
Last Updated : 20 Apr 2024 11:53 PM
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 267 இலக்கு என்ற நிலையில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த டெல்லி அணி 199 ரன்களில் சுருண்டது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத்தின் ஓப்பனர்களாக களம் கண்ட டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணைந்து டெல்லியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர்.
16 பந்துகளிலயே அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் இது. இருவரும் இணைந்து சிக்ஸ், ஃபோர் என விளாசிக்கொண்டிருக்க 6 ஓவருக்கு 125 ரன்களைச் சேர்த்து மலைக்க வைத்தது இந்த இணை. ஐபிஎல் பவர் ப்ளே சரித்திரத்தில் 125 என்பது அரியப்பெரும் சாதனை.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 266 ரன்களை குவித்தது. ஷாபாஸ் அகமது 59 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 267 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணி, ஆரம்பத்திலேயே தடுமாறியது. தொடக்க வீரர்களாக இறங்கிய பிரித்வி ஷா 16 ரன்களிலும் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்து இறங்கிய ஜேக் பிரேசர் மற்றும் அபிஷேக் போரெல் இருவரும் சற்று நம்பிக்கையூட்டும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜேக் பிரேசர் 18 பந்துகளில் 65 ரன்களும், அபிஷேக் 22 ரன்களில் 45 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை ஏற்றினர்.
தொடர்ந்து இறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்கள், ரிஷப் பந்த் 44 ரன்கள், லலித் யாதவ் 7 ரன்கள், அக்சர் படேல் 6 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்கள் விழ 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த டெல்லி அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து 67 ரன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT