Published : 20 Apr 2024 12:11 PM
Last Updated : 20 Apr 2024 12:11 PM
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச டி20 ஸ்கோரை இருமுறை அடித்து நொறுக்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தாரக மந்திரம், அதன் கேப்டன் பாட் கமின்ஸின் அதிரடி வேட்கைதான். அதாவது, ட்ராவிஸ் ஹெட் கூறுவது போல் பவர் ப்ளேயை அதிகபட்சம் பயன்படுத்தி, அதில் மேக்ஸிமம் ஸ்கோர் செய்து விட வேண்டும். ட்ராவிஸ் ஹெட், அய்டன் மார்க்ரம், கிளாசன், அபிஷேக் சர்மா, கடைசியில் அப்துல் சமது என்று பெரிய அதிரடி கும்பல் உள்ளது. இவர்கள் உண்மையில் எதிரணி பவுலர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்தான்.
ட்ராவிஸ் ஹெட் இதுவரை 235 ரன்களையும், அபிஷேக் சர்மா 211 ரன்களையும் முறையே 199 மற்றும் 197 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளனர். இன்னும் கொஞ்சம் முயன்றால் டி20-யில் முதல் 300 ரன்களை எடுக்கும் அணியாக சன் ரைசர்ஸ் இருக்கும். எடுக்க முடியும், அதை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்கிறார் பாட் கமின்ஸ். ஆர்சிபி அணியை அன்று அடித்து நொறுக்கிய பிறகு பாட் கமின்ஸ் ஓய்வறையில் வீரர்களிடம் கூறியதாக கசிந்த செய்தியில், ‘எதிரணி பவுலர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்பதுதான் சன் ரைசர்ஸின் கொள்கை என்று கூறியதாகத் தெரிகிறது.
“இந்த அணுகுமுறை எப்போதும் வெற்றியடையும் என்று கூற முடியாது, ஆனால், எங்களுக்கு எதிராக ஆடும்போது அனைவரும் அச்சப்படுவதைப் பார்க்க முடிகிறது. எதிரணியினர் களமிறங்கும் முன்பே அவர்களின் சாற்றைப் பிழிந்து சக்கையாக்கி விட வேண்டும்” என்பதுதான் அணுகுமுறை என்கிறார் ஹெட். ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாபுடனான ஆட்டம் சன் ரைசர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரின் மோசமான ஆட்டம் என்றும் ஹெட் ஒப்புக் கொள்கிறார். டி20 ஸ்பெஷலிஸ்ட்டாக ஹெட் உருவாகிவிட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் உடனடியான காக்கப்பட வேண்டிய வடிவம் என்கிறார்.
“இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வருகிறது, உலகக் கோப்பையில் ஆட அனைவருக்குமே ஆவலிருக்கும். பிறகு சாம்பியன்ஸ் டிராபி, அடுத்து ஒருநாள் உலகக் கோப்பை. எனவே கொஞ்ச நாளைக்கு வெள்ளைப்பந்து ஆதிக்கம்தான். ஆனால் நான் மூன்று வடிவ வீரராக இருக்கவே விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெள்ளைப்பந்து தொடர்களை உலகக் கோப்பைக்கு மட்டுமே சுருக்கிக் கொள்வது நலம்” என்கிறார் ட்ராவிஸ் ஹெட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT