Published : 19 Apr 2024 11:28 PM
Last Updated : 19 Apr 2024 11:28 PM
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இரண்டாவது இன்னிங்ஸில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ராகுலும், டிகாக்கும். 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் டிகாக் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராகுல், அப்படியே அதனை தொடர்ந்தார்.
53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார் ராகுல். பதிரனா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். ஜடேஜா அற்புதமாக கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. துஷார் தேஷ்பாண்டே வீசிய 19-வது ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட அந்த ரன்களை எடுத்தது லக்னோ. அதன் மூலம் 6 பந்துகள் எஞ்சியிருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் சிஎஸ்கே அணியின் ஓப்பனராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 2-வது ஓவரிலேயே டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட்டும் 4-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 51 ரன்களைச் சேர்த்தது.
ஓரளவுக்கு ஆடிய அஜிங்க்ய ரஹானேவை 9-வது ஓவரில் போல்டாக்கினார் கிருணல் பாண்டியா. 36 ரன்களில் ரஹானே அவுட். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களிலும், சமீர் ரிஸ்வி 1 ரன்கள் என அவுட்டாக தடுமாறிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை சேர்த்தது.
ஸ்கோரை ஏற்றும் முயற்சியில் மொயின் அலி 18-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினாலும் அதற்கு அடுத்த பந்தே 30 ரன்களில் விக்கெட்டானார். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஜடேஜாவுடன் 7-வது விக்கெட்டுக்கு கைகோத்தார் தோனி.
அவர் விளாசிய 2 சிக்சர்ஸால் அரங்கமே உற்சாகமடைந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 176 ரன்களைச் சேர்த்தது. ஜடேஜா 57 ரன்களுடனும், தோனி 28 ரன்களுடனும் விக்கெட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி தரப்பில், கிருணல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டாயினிஸ், மொஹ்சின் கான், யஷ் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT