Published : 18 Apr 2024 10:15 AM
Last Updated : 18 Apr 2024 10:15 AM

கிரிக்கெட்டில் சோடை... கல்லா கட்டுவதில் ஆர்சிபி சூரத்தனம்! - விண்ணை முட்டும் டிக்கெட் விலை

7 ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடப்பு தொடரில் 6 போட்டிகளில் தோற்று பரிதாபமாகக் காட்சியளிக்கும் ஆர்சிபி கிரிக்கெட்டில் வேண்டுமானால் சோடை போயிருக்கலாம். ஆனால் கேட் கலெக்‌ஷன் கல்லா கட்டுவதில் நம்பர் 1 ஆகத் திகழ்கிறது. ஆர்சிபி போட்டிகளுக்குரிய குறைந்தபட்ச டிக்கெட் விலையையும், அதிகபட்ச டிக்கெட் விலையையும் கேட்டால் மயக்கம்தான் வரும்.

ஆம்! முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றின் செய்திக் கட்டுரையின்படி, போட்டிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக கடும் டிமாண்ட் இருப்பதைப் பயனப்டுத்திக் கொண்டு வானளாவ டிக்கெட் விலைகளை ஐபிஎல் உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். பிசிசிஐ ஐபிஎல் உரிமையாளர்களின் விலை நிர்ணயத்தில் தலையிடுவதில்லை. அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதுதான் தங்களுக்கு இட்ட பணி என்கின்றனர்.

பெங்களூருவில் ஆகக் குறைந்த டிக்கெட் விலை ரூ.2,300. ஐபிஎல் உரிமையாளர்கள் வசூலிக்கும் நுழைவுக் கட்டணத்திலேயே இதுதான் அதிகம். சரி! கடைசி நேரத்தில் அலை மோதும் ரசிகர்கள் தலையில் வைக்கப்படும் கொள்ளி எவ்வளவு தெரியுமா? முதல் போட்டிக்கு டிக்கெட் ஒன்றிற்கு ரூ.4,840 முதல் ரூ.6,292 வரை வசூலிக்கப்பட்டது.

அனைத்துக்கு மேலாக கார்ப்பரேட் ஸ்டாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைக் கேட்டால் மயக்கம்தான் வரும். டிக்கெட் ஒன்றுக்கு கிராக்கிக்கு ஏற்றபடி ரூ.42.350 முதல் ரூ.52,398 வரை வசூலிக்கப்படுகிறது.

‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை... என்னைச் சொல்லிக் குற்றமில்லை... காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குத்தமடி’ என்ற தமிழ் திரைப்பாடல் வரிகள் கூறுவது போல் ரசிகர்கள் கொடுக்கத் தயாராயிருக்கும் பட்சத்தில் விலை ஏன் விண்ணை முட்டாது.

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த பேட்டி ஒன்றில், “டிக்கெட்டுகள் வெளியே கள்ளச்சந்தையில் பெரிய தொகைக்கு விற்கப்படும் போது எங்களுக்கு அதனால் ஒன்றும் பயனில்லை. அதனால் அதற்கேற்ப அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

ஸ்டேடிய வசதிகள் மேம்பாடு செய்யப்பட்ட பிறகு சந்தையில் டிக்கெட் தேவைகளுக்கு ஏற்ப டிக்கேட் விலையும் மாற்றமடையும். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் நாங்கள் 58% வரி செலுத்துகிறோம் (28% ஜிஎஸ்டி; 25% பொழுதுபோக்கு வரி) எனவே எங்களுக்கு லாபம் குறைவுதான்” என்கிறார்.

சென்னையில் ஆகக் குறைந்த டிக்கெட் விலை டிக்கெட் ஒன்றிற்கு ரூ.1700, அதிகபட்ச விலை ரூ.6,000. மற்ற டிக்கெட் விலைகள் ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000.

ஆர்சிபியின் குறைந்தபட்ச விலையும் அதிகபட்ச விலையையும் பார்த்தோம். மற்ற உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் தொகைகள் இதோ:

> லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் குறைந்த பட்ச விலை ரூ.499, அதிகபட்ச விலை ரூ.20,000
> கேகேஆர் குறைந்த விலை ரூ.750, அதிகபட்சம் ரூ.28,000.
> மும்பை இந்தியன்ஸ் குறைந்த விலை ரூ.990, அதிகபட்ச விலை ரூ.18,000
> குஜராத் டைட்டன்ஸ் குறைந்தபட்ச விலை ரூ.499, அதிகபட்ச விலை ரூ.20,000
> சிஎஸ்கே குறைந்தவிலை ரூ.1,700, அதிகபட்ச விலை ரூ.6000.
> டெல்லி கேப்பிடல்ஸ் குறைந்தபட்ச விலை ரூ.2000, அதிகபட்ச விலை ரூ.5000
> ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.500 மற்றும் ரூ.20,000
> சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.750, ரூ.30,000
> பஞ்சாப் கிங்ஸ், ரூ.950, ரூ.9,000.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x