Published : 17 Apr 2024 05:16 PM
Last Updated : 17 Apr 2024 05:16 PM

டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ‘கண்டிஷன்’

ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிக்கலாகவே அமைந்துள்ளது. மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதன் காரணமாக ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். அதனாலோ என்னவோ அவரால் களத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. கேப்டனாக முடிவெடுப்பதில் சொதப்பிவரும் அவர், தனிப்பட்ட முறையில் சரியாக பங்களிக்கவில்லை. இந்த சீசனில் 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

பந்துவீச்சிலோ பெரிதாக எதுவும் அவரால் செய்யமுடியவில்லை. சென்னைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சை தோனி துவம்சம் செய்ததே அதற்கு சான்று. எனினும், ஆல் ரவுண்டர் என்ற முறையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் அங்கம் வகிக்கிறார்.

இதனிடையே, டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக, ஹர்திக் பாண்டியாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில கட்டளைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடர்பாக கடந்த வாரம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவது குறித்து விவாதித்த மூவரும், அவர் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், அவர் தொடர்ந்து பந்துவீச வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நடப்பு சீசனில் இதுவரை பந்துவீசிய 6 போட்டிகளில் மொத்தம் 11 ஓவர்கள் வீசி 132 ரன்கள் வரை விட்டுக்கொடுத்துளளார். அவர் பந்துவீச்சில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.

எனவே தான் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பந்துவீசினால் உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படும் என்பதை ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துவிட்டதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி தடுமாற்றத்தில் உள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு, பிசிசிஐயின் புதிய கட்டளை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பித்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x