Published : 16 Apr 2024 08:39 AM
Last Updated : 16 Apr 2024 08:39 AM
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று (திங்கள்) நடைபெற்ற போட்டியில் மேக்ஸ்வெல் இல்லை, பலரும் அவரை அவர் ஃபார்ம் காரணமாக தேர்வு செய்யவில்லை என்று கருதிய வேளையில், மேக்ஸ்வெல் தானே கேப்டன் டுபிளெசியிடம் போய் தனக்கு பிரேக் வேண்டுமெனவும், தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர இதுவே சிறந்த தருணம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் 32 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். நேற்று கட்டை விரல் காயம் காரணமாக அவர் ஆடவில்லை என்றே நம்பப்பட்டது. ஆனால், மேக்ஸ்வெல் இன்று நேர்மையாக தனக்கு பிரேக் வேண்டி கேட்டதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
நேற்றைய 6-வது தோல்விக்குப் பிறகு மேக்ஸ்வெல் கூறியது: “நான் கடந்த போட்டி முடிந்தவுடனேயே நேராக ஃபாப் டு பிளெசியிடமும் பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதில் வேறு வீரரை ஆடவைப்பதற்கான தருணம் இது என்றேன். எனக்கு கடந்த காலத்திலும் இப்படி நடந்துள்ளது. ஆடிக் கொண்டேயிருப்பேன்... திடீரென ஏதோவொரு மனத்தடை ஏற்படும். எனவே, எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை என்பதை உணர்ந்தேன்.
மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல்/மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன். எங்கள் அணியில் பவர் ப்ளேவுக்குப் பிறகே பெரிய குறைபாடு உள்ளது. அங்கு வந்து ஆடுவதுதான் என் பலம். பேட்டிங்கில் நான் நம்பிக்கையளிக்கும் பங்களிப்புகளைச் செய்யவில்லை. 7 போட்டிகளில் 6 தோல்வி என்னுன் நிலையில் எனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பளிப்பதுதான் சிறந்தது என்று கருதுகிறேன்.
அப்படி வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவர்கள் தன்னை நிரூபிக்கவும் முடியும். முடிந்தால் அந்த இடத்தையும் அவர் தக்கவைக்க முடியும். டி20 போட்டிகள் விநோதமானது. மிகவும் கடினமாக முயற்சித்து ஆடுவோம். இதனால் அடிப்படைகளை மறந்து விடுவோம்” என்று மேக்ஸ்வெல் கூறினார்.
மேக்ஸ்வெல் இப்படிச் செய்வது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணியிலிருந்து இப்படித்தான் விலகியிருக்கிறார். கிங்ஸ் லெவன் அணிக்கு ஆடும்போதும் இதேபோன்று விலகியுள்ளார்.
இப்போது மீண்டும் அதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளார். அநேகமாக இதுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...