Published : 12 Apr 2024 03:43 PM
Last Updated : 12 Apr 2024 03:43 PM
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டி முடிந்ததும், ‘பும்ரா போன்றதொரு பவுலர் எங்கள் அணியில் இல்லை. அதுதான் இரண்டு இன்னிங்ஸுக்கும் இடையிலான வித்தியாசம்’ என ஆர்சிபி கேப்டன் டூப்ளசி சொல்லியிருந்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் பும்ரா தான்.
ஆர்சிபி அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா. இதில் 13 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் வீசி இருந்தார். “இந்த நாள் சிறந்த நாளாக அமைந்தது. களத்தில் நான் செய்ய நினைத்ததை செய்தேன். பந்து கிரிப் ஆவதை முதல் ஓவரில் நான் கவனித்தேன். நல்ல லெந்தில் பந்தை வீச விரும்பினேன். கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருவதால் நான் இதற்கு பழக்கப்பட்டவன் ஆகியுள்ளேன்.
நமக்கு சிறப்பாக அமையும் நாளில் அதிக கொண்டாட்டமும் கூடாது, மோசமான நாளில் மனதளவில் துவண்டு போகவும் கூடாது” என ஜென் துறவியை போல முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு பும்ரா பேசினார். கூடவே ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தையும் பாராட்டி இருந்தார்.
7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதும், ஆட்ட நாயகனாக அவர் அறிவிக்கப்பட்டார். “இந்த அவுட்கம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. டி20 கிரிக்கெட் ஃபார்மெட் பவுலர்களுக்கு மிகவும் கடுமையான சோதனையை தரும். அதனால் அனைத்து விதமான திறனும் பவுலர்களுக்கு அவசியம். அதில்தான் நான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பொறுத்த வரையில் போட்டிக்கு தயாராவதுதான் மிகவும் முக்கியம். வலைப்பயிற்சியில் நமக்கான விடை கிடைக்கும்.
எல்லா நேரமும் யார்க்கர் வீச வேண்டுமென இல்லை. பவுன்சர், பந்துவீச்சில் நமது வேகத்தை குறைத்தும் வீச வேண்டி இருக்கும். இங்கு ஈகோவுக்கு இடம் இல்லை. ஆடுகளம் குறைந்த வேகத்தில் வரும் பந்துகளுக்கு கைகொடுத்தால் பவுலர்கள் அதை தான் செய்ய வேண்டும். பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சை துவம்சம் செய்தால் எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய்வேன். அதிலிருந்து மீண்டு வருவது குறித்து யோசிப்பேன். மொத்தத்தில் தீவிர பயிற்சி என்பது மிகவும் அவசியம்” என பும்ரா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT