Published : 11 Apr 2024 12:16 PM
Last Updated : 11 Apr 2024 12:16 PM
எதிரணி வெற்றிபெற 6 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இந்த சூழ்நிலையில் 10 ரன்களை தடுக்க யாரிடம் பவுலிங் கொடுப்பீர்கள் பும்ராவிடமா அல்லது நசீம் ஷாவிடமா என்று நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்ப இதற்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அஸம் கூறிய பதில் நெட்டிசன்களின் வறுத்தெடுத்தலுக்கு அவரை ஆளாக்கியுள்ளது.
ஜால்மி டிவிக்காக அளித்த பேட்டி ஒன்றில் 10 ரன்களை 6 பந்துகளில் தடுத்து வெற்றிபெற வேண்டுமெனில் நசீம் ஷாவிடம் தான் கொடுப்பேன் என்று பாபர் அஸம் பதில் கூறினார். இது இந்திய ரசிகர்களிடத்தில் பெரிய கோபாவேசத்தையும் கேலிகளையும் கிண்டல்களையும் கிளறியுள்ளது. இந்த நேர்காணலில் கண்களைச் சிமிட்டாமல் கேள்விக்கு எடுத்த எடுப்பிலேயே ‘நசீம் ஷா’ என்று கூறினாரே பார்க்கலாம் அடுத்த அரைமணி நேரத்தில் எக்ஸ் தளத்தின் இந்த போஸ்ட் வைரலானது.
ஏன் நசீம் ஷாவைத் தேர்வு செய்தேன் என்று பாபர் அஸம் கூறிய காரணம், அவர் காயத்திலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளார் பாருங்கள் என்பதாகவே இருந்தது. மேலும் நசீம் ஷாவின் திறமை தனித்துவமானது, பாகிஸ்தானில் இத்தகைய திறமைகள் அடிக்கடி வருவதில்லை என்றும் நசீம் ஷா தேர்வுக்குக் காரணம் கூறியுள்ளார்.
இது போதாதா?... நம் ரசிகர்களுக்கு, பாபர் அஸமை பின்னி எடுத்து விட்டனர். நெட்டிசன்கள் சிலரது எதிர்வினை கேலிகளும் கிண்டல்களும் நிரம்பியதாக இருந்தது. “ஆம்! நசீம் ஷா கடைசி ஓவரில் 10 ரன்களைக் கொடுக்காமல் வீசுவார், உண்மைதான் எதிர்முனையில் பாபர் அஸம் பேட்டிங் ஆடினால்” என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார்.
இன்னும் சிலர், “பாகிஸ்தான் வீரர் பாகிஸ்தான் பவுலரை தெரிவு செய்வதில் ஆச்சரியமில்லையே, ரோஹித்தையோ, கோலியையோ இதே கேள்வியை மாற்றி பும்ராவா ஷோயப் அக்தரா என்று கேட்டிருந்தால் பும்ரா என்றுதானே ரோஹித் கூற முடியும்” என்று சிலர் பாபர் அஸமுக்கு ஆதரவாகப் பதிலளித்துள்ளனர்.
இன்னும் சிலர், “கடைசி ஓவரை நவாஸிடம் கொடுத்தவர் இதைப்பற்றி பேசலாமா” என்று கிண்டலடித்துள்ளனர். “ஹர்திக் பாண்டியா, கோலிக்கு எதிராக நவாஸ் என்ற ஸ்பின்னரிடம் கடைசி ஓவரை கொடுத்த பாபர் அஸம் இதைப்பற்றியெல்லாம் கருத்துக் கூறலாமா” என்று சிலர் சாடியுள்ளனர்.
இன்னும் ஒரு சில தரப்பினர், “இந்திய வீரர்களோ, மீடியாக்களோ பாகிஸ்தான் வீரரைப் பற்றி பேசுகின்றனரா, பாகிஸ்தான் மீடியா ஏன் எப்போதும் ஐபிஎல், பிசிசிஐ, கோலி என்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது” என்று சாடியுள்ளனர்.
இன்னும் ஒரு தரப்பு, “நசீம் ஷா பேட்டிங்கில் கடைசி ஓவரில் 10 ரன்களை அடித்து வெற்றி பெற வைப்பார். அதைத்தான் பாபர் அஸம் இப்படி தெரியாமல் உளறிவைத்துள்ளார்” என்றும் கிண்டலடித்துள்ளனர். தன் நாட்டு வீரருக்கு உற்சாகமூட்டுவதற்காக பாபர் அஸம் கூறிய பதில் கடைசியில் நகை முரணாகவும் நகைப்புக்குரியதாகவும் மாறிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT