Published : 11 Apr 2024 11:27 AM
Last Updated : 11 Apr 2024 11:27 AM
ஐபிஎல் கிரிக்கெட்டில் சேஸிங்கில் ஒரு அணி சிறந்து விளங்குகிறது என்றால் அது குஜராத் டைட்டன்ஸ் என்றே கூற வேண்டும். அதுவும் நேற்று (ஏப்.10) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக்கின் அதிரடி ஆட்டத்தில் 196 ரன்களைக் குவித்தது. இந்த லோ பவுன்ஸ் பிட்சில் இது அதிகமான ஸ்கோர். `180 ரன்களே வெற்றிபெறுவதற்கான ரன்கள்தான்.
ராஜஸ்தான் அந்த ஒரு பவுலிங்கை வைத்துக் கொண்டு வென்றிருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. காரணம் ஷுப்மன் கில்லின் மாஸ்டர் மைண்ட் தான். இவரது இந்த மனோநிலையில்தான் ஜாம்பவான் கோலியும் ஆட வேண்டும். ஆனால் கோலிக்கு வேறு அஜண்டா உள்ளது. ‘டேய் நான் இன்னும் டி20 தாதா’ என்று அவர் யாருக்கோ மெசேஜ் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, அணி தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது பற்றி அவர் கவலைப்படவில்லை.
முன்பெல்லாமாவது சதம் எடுத்து என்ன பயன், அணி வெற்றி பெறாத சதம் என்ன பெரிய சதமாயிருந்து என்ன பயன் என்று பேசி வந்த விராட் கோலி, இன்று தன் சதத்தை மையப்படுத்தியே பேட்டிகளில் பேசுகிறார் என்றால், பாவம் ஏதோ அவர் அங்கீகார நெருக்கடியில் இருக்கிறார் போல் தெரிகிறது. மாறாக கில்லின் மனநிலை என்னவென்பதை அவர் கூற்றின் மூலமே கேட்போம்.
“சேஸிங்கின் போது 3 ஓவர்களில் 45 ரன்களை ஆரம்பத்தில் அடிக்கத் திட்டமிட்டோம். இது எடுக்கக் கூடியதுதான். ஓவருக்கு 15 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் ஒரு ஓவருக்கு 2 பவுண்டரி ஹிட்கள் தேவை. இரு முனையிலும் 9 பந்துகளில் தலா 22 ரன்களை எடுக்க வேண்டும். இதுதான் எங்களது கணிதத் திட்டம். 9 பந்துகளில் 3 ஹிட்கள் தேவை. இப்படி ஆடும் போது எங்களில் ஒரு பேட்டர் முழு ஹிட்டிங்கில் சென்று மேலும் ரன் குவிப்பில் ஈடுபட்டால் ஆட்டம் விரைவில் முடிந்து விடும். இந்தத் திட்டம் மிக்க பலனளிக்கும். சேஸிங்கை சுலபமாக்கும்.” என்றார்.
இது அபாரமான ஒரு கணிப்பு. இங்கு சுயநலம் இல்லை, அங்கீகார நெருக்கடி இல்லை. தான் இன்னும் தாதா தான் என்கிற செருக்குக் காட்ட வேண்டிய தேவையில்லை. பிசினஸை கருத்தில் கொண்டு ஆடக்கூடாது. இதுதான் ஷுப்மன் கில் கூறுவது. அணிக்கு வெற்றி எப்படி சாத்தியம் என்று சிந்தித்ததன் விளைவு நேற்று ஷுப்மன் கில் 44 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். அதுவும் அஸ்வின் மற்றும் சஹால் பந்துகளை விரட்டியதன் மூலம் ஷுப்மன் கில் இன்னிங்ஸ் திட்டமிடப்பட்ட அதிரடியே.
சஹால், அஸ்வின் தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஓவர் மாஸ்டர்கள், அவர்களை ஒரு கை பார்த்தால் வெற்றி நிச்சயம் என்பது திட்டமிடல். இதை சரியாக நிகழ்த்தியவர் ஷுப்மன் கில். மாறாக கோலி என்ன செய்கிறார், தான் சதமெடுக்க எதிர்முனை வீரர்கள் இவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதோடு நிர்பந்திக்கவும் செய்கிறார்.
ஷுப்மன் கில்லையும் குஜராத் டைட்டன்ஸின் பிளானையும் எதிரணி கேப்டனான சஞ்சு சாம்சனே பாராட்டினார். ஷுப்மன் கில் சொல்வதுதான் டி20 தாத்பரியம், குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இதுதான் சரி. அதை சரியாகப் புரிந்து வைத்துக் கொண்ட ஷுப்மன் கில் பிழைக்கத் தெரிந்த பிள்ளைதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT