Published : 11 Apr 2024 12:05 AM
Last Updated : 11 Apr 2024 12:05 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஜெய்ஸ்வால், 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதம் பதிவு செய்த பட்லரை, வெறும் 8 ரன்களில் ரஷித் கான் சுழலில் வெளியேற்றினார். 3-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணைந்து 130 ரன்கள் சேர்த்தனர். பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசினார். அவரை மோகித் சர்மா 19-வது ஓவரில் அவுட் செய்தார். சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட்மெயர் 13 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 196 ரன்கள் எடுத்தது.
197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஓபனிங் ஆடினர். ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர் என 46 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்து அதிரடி காட்டினார் ஷுப்மன் கில். 15வது ஓவர் வரை தாக்குப் பிடித்த கில் சாஹல் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து இறங்கிய மேத்யூ வேட் மற்றும் அபினவ் மனோகர் இருவரும் தலா நான்கு மற்றும் ஒரு ரன்களுடன் நடையை கட்டவே, குஜராத் அணியின் ரசிகர்களின் முகங்கள் நம்பிக்கையிழந்து காணப்பட்டது.
பின்னர் இறங்கிய ராகுல் டேவாட்டியா மற்றும் ஷாருக் கான் இணையால் குஜராத் அணியின் ஆட்டத்தில் சிறிய முன்னேற்றம் தெரிந்தது. 18 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே அடித்திருந்த குஜராத் அணியை கடைசி 2 ஓவர்களில் காப்பாற்றினார் ரஷீத் கான்.
பரபரப்பான கடைசி தருணத்தில் நான்கு பவுண்டரிகளை அடித்து குஜராத் அணி ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தார். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டேவாட்டியா ரன் அவுட் ஆகவும், தோல்வி உறுதி என்ற நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்ட நேரத்தில், கடைசி பந்தில் ஒரு ஃபோர் தூக்கி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் ரஷீத் கான்.
பரபரப்பான இறுதி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT