Published : 10 Apr 2024 04:59 AM
Last Updated : 10 Apr 2024 04:59 AM

பார்முக்கு திரும்புவாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்? - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்த அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்மின்றி தவித்து வருகிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி இரட்டை சதங்கள் விளாசிய நிலையில் ஐபிஎல் தொடரை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். 4 ஆட்டங்களில் கூட்டாக அவர், 39 ரன்களே சேர்த்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் மேம்பட்ட திறனைவெளிப்படுத்துவதில் கூடுதல் முனைப்புடன் செயல்பட ஜெய்ஸ்வால் முயற்சிக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் முதல் 3 ஆட்டங்களில் தடுமாறிய நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசி தனது பார்மை மீட்டெடுத்துள்ளது அணிக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. பொறுப்புடன் முன்னின்று அணியை வழிநடத்தும் சஞ்சுசாம்சன் 2 அரை சதங்களுடன் 178 ரன்கள் விளாசி சிறந்த பார்மில் உள்ளார்.

இவர்களுடன் ரியான் பராக்கின் தாக்குதல் மட்டை வீச்சும் பலமாக உள்ளது. 2 அரை சதங்களுடன் 185 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவரிடம் இருந்துமீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல்ஆகியோரும் மட்டையை சுழற்றினால் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்யலாம்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் டிரெண்ட் போல்ட்,நந்த்ரே பர்கர், யுவேந்திர சாஹல் கூட்டணி சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகிறது. இவர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும். அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தசீசனில் இதுவரை ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். அதேவேளையில் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை விட்டுக்கொடுப்பதும் சற்று பலவீனமாக கருதப்படுகிறது. அவரும் பார்முக்கு திரும்பும்பட்சத்தில் அணியின் பந்து வீச்சு பலமும் அதிகரிக்கும்.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டிருந்தது குஜராத் அணி.அந்த ஆட்டத்தில் 164 ரன்கள்இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் சாய் சுதர்சன், ஷுப்மன் கில் ஆகியோரை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பது பலவீனமாகி உள்ளது.

நடுவரிசையில் அதிரடியாக விளையாடக்கூடிய டேவிட் மில்லர்காயம் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் களமிறங்கவில்லை.

இது அணியின் செயல் திறனைவெகுவாக பாதித்துள்ளது. அவருக்கு பதிலாக களமிறங்கிய கேன் வில்லியம்சனிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அதேபோன்று ஆல்ரவுண்டர்களான விஜய்சங்கர், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான பங்களிப்பு இல்லை. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் ஒருங்கிணைந்து மேம்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கலாம்.

பந்து வீச்சை பொறுவத்தரையில் கடந்த இரு ஆட்டங்களிலும் மோஹித்சர்மா சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. உமேஷ் யாதவ் தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றினாலும் அதன் பின்னர் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதது பலவீனமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமதுஆகியோரும் தங்களது செயல்திறனில் முன்னேற்றம் காண்பது அவசியம்.

குஜராத் ஆதிக்கம்: ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் குஜராத் 4 முறையும், ராஜஸ்தான் ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன. தற்போது 6-வது முறையாக இரு அணிகளும் மோத உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x