Published : 20 Aug 2014 10:00 AM
Last Updated : 20 Aug 2014 10:00 AM

ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ்

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டி20 “ஸ்பெஷலிஸ்ட்” அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். கேப்டன் அலாஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் முழங்கால் காய பிரச்சினையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. அவர் தனது முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக இந்த வாரத்தில் மருத்துவ நிபுணருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் அணியில் இடம் பெற்றுள்ளார். அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சனுக்கு ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு ஆல்ரவுண்டரான ரவி போபாராவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு செப்டம்பர் 7-ம் தேதி ஒரேயொரு டி20 போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஃபின், ஹரி கர்னே, அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், இயோன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் டிரெட்வெல், கிறிஸ் வோக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x